அமைதி பூங்காவா… அரக்கர்களின் பூங்காவா? – கோவை சிறுமி பாலியல் வழக்கில் போலீஸ் அலட்சியம் ஏன்?


அந்தக் குழந்தை இந்நேரம் உயிருடன் இருந்திருந்தால், ஒன்றாம் வகுப்பு முழு ஆண்டுத் தேர்வை எழுதிக் கொண்டிருக்கும். கோடை விடுமுறையைக் கொண்டாடுவது தொடர்பாகக் கனவுகள் கண்டிருக்கும். தனது தங்கையுடன் செல்லச் சண்டை போட்டிருக்கும். தன் பாட்டிக்கு வெற்றிலை வாங்கிக் கொடுத்திருக்கும். தான் ஆசைப்பட்ட விஷயங்களைத் தன் பெற்றோரிடம் கேட்டு அடம் பிடித்திருக்கும். ஆனால், ஒரே ஒரு மாலைப் பொழுது அந்தச் சிறுமியைச் சிதைத்துவிட்டது. அந்தக் குழந்தையின் ஒட்டு மொத்த கனவுகளும் சிதைந்து, குடும்பம் கண்ணீரில் தத்தளித்து வருகிறது. தமிழகமும் சிறுமியின் மரணத்துக்கு நீதி கேட்டு போராடி வருகிறது.

பாகிஸ்தான் நாட்டுக்குள் சென்று நடத்திய தாக்குதலைச் சொல்லி, தேசத்தின் பாதுகாப்பு குறித்துப் பேசி முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், பி.ஜே.பி தலைவர்களும் வாக்கு கேட்டு வருகின்றனர். ஆனால், சொந்த மண்ணில் மழலை மாறாத ஒரு குழந்தையைச் சிதைத்த குற்றவாளிகள் மீது ஐந்து நாள்களுக்கு மேலாகியும் நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றனர்.

சிறுமியின் பெற்றோர், “எங்களுக்கு நான்கு பேர் மீதுதான் சந்தேகம்"; என்று தெள்ளத்தெளிவாகக் கூறிவிட்டனர். அந்த நான்கு பேர் உட்பட 20-க்கும் மேற்பட்டோரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தனிப்படை அமைத்தனர். “துப்பு கொடுப்பவர்களுக்குச் சன்மானம் வழங்கப்படும்"; என்று பிட் நோட்டீஸ் கொடுத்துவிட்டனர். தற்போதுவரை, இவர்கள்தான் குற்றவாளிகள் என்று போலீஸார் யாரையும் சொல்லவில்லை.

உண்மையைத் தெரிந்துகொள்ள கோவை, துடியலூர் அருகே உள்ள சிறுமியின் கிராமத்துக்குச் சென்றோம். சிறுமியின் அக்கம்பக்கத்தினர், உறவினர்கள், போலீஸ் அனைவரிடமும் பேசினோம். வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுமி மாயமானதையடுத்து, பல்வேறு இடங்களில் அவரைத் தேடியுள்ளனர். பொதுவாகவே யாரின் வீட்டுக்கும் செல்லும் பழக்கம் அந்தச் சிறுமிக்குக் கிடையாது. இதனால், அவரது தாய் போலீஸில் புகார் கொடுக்கிறார். போலீஸ் மற்றும் பெற்றோர் அக்கம் பக்கத்தினர் விடிய விடியச் சிறுமியைத் தேடுகின்றனர்.

இந்த நேரத்தில் சிறுமியின் கிராமத்தைப் பற்றி விளக்க வேண்டும். பட்டியலின மக்கள் அதிகம் வாழும் பகுதி. குடிசை மற்றும் ஓட்டு வீடுகளுக்கு நடுவே ஆங்காங்கே கான்கிரீட் கட்டடங்கள் இருக்கின்றன. சிறுமியின் வீட்டுக்கு வருவதற்கு மொத்தம் மூன்று வழிகள். அதில் ஒரு வழியில் உள்ள வீடு ஒன்றில், அன்றைய தினம் துக்க சம்பவம் (மரணம்) நடந்துள்ளது. இதனால், அந்த வழியில் யாரும் வருவதற்கு வாய்ப்பு இல்லை. மற்ற இரண்டு வழிகளில் புதிதாக யார் வந்தாலும் தெரிந்துவிடும். அங்குள்ள அனைத்துச் சந்து, பொந்துகளிலும் தேடியாகிவிட்டது. சிறுமி கிடைக்கவேயில்லை. நேரமாக நேரமாகப் பயம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதிகாலை 5 மணி வரை இதுதான் நிலைமை. 5.30 மணியளவில் எது நடக்கக் கூடாது என்று நினைத்தார்களோ, அது நடந்துவிட்டது.

சிறுமியின் வீட்டுக்குச் சற்று எதிரில் உள்ள ஒரு சந்தில், டி-ஷர்ட்டில் கட்டப்பட்ட நிலையில் சிறுமியின் சடலம் இருக்கிறது. உடல் முழுவதும் ரத்தக் காயங்கள். அப்போதே, நான்கு பேர் மீதுதான் சந்தேகம் இருப்பதாகச் சிறுமியின் தாய் போலீஸிடம் சொல்லிவிட்டார். அவர் சொன்ன புகாரில் முதல் இடத்தில் இருப்பவர் விஜயக்குமார் என்றழைக்கப்படும் சுதர்சன். மினிடோர் ஓட்டி வருகிறார். சிறுமியின் வீட்டுக்கு நேர் எதிரில்தான் விஜயக்குமாரின் வீடு. தாய், தந்தை, ஒரு தங்கை ஆகியோருடன் கடந்த ஐந்து ஆண்டுகளாக அந்த வீட்டில் போக்கியத்துக்கு வசித்து வருகின்றனர்.

சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டதும், விஜயக்குமார் வீட்டின் அருகேதான். அதிகாலை 5 மணிவரை அங்கு இல்லாத சடலம், 5.30 மணிக்கு எப்படி அங்கு வந்தது? அந்த நேரத்தில் பலரும் சிறுமியைத் தேடிக் கொண்டிருந்துள்ளனர். எனவே, நீண்ட தூரத்தில் இருந்து சடலத்தை எடுத்து வந்திருந்தால், அவர்கள் அப்போதே பிடிபட்டிருப்பார்கள். ஆக, சிறுமியின் வீட்டின் மிக அருகே இருப்பவர்கள்தான் இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெளிவாகிறது.

மேலும், விஜயக்குமார் பற்றிக் கேட்டால் பலரும், குடிகாரன், சண்டைக்காரன், பார்வையே சரியிருக்காது என்றுதான் சொல்கின்றனர். குறிப்பாக, அந்தச் சிறுமிக்குச் சில மாதங்களுக்கு முன்பு அடிக்கடி சாக்லெட், பிஸ்கட் கொடுப்பது போன்ற செயல்களில் விஜயக்குமார் ஈடுபட்டுள்ளார். இதை, அவரது தாய் முன்பே கண்டித்துள்ளார். இவையெல்லாம்தான் விஜயக்குமார் மீதான சந்தேகத்தை அதிகரிக்க வைக்கிறது. அவர் மட்டுமல்ல, விஜயக்குமார் தங்கியிருக்கும் வீட்டின் உரிமையாளரின் மகன் கௌதம், சந்தோஷ், துரைராஜ் உள்ளிட்டோர் மீதும் புகார் கூறப்படுகிறது. இதில், துரைராஜுக்கு உயர்நிலைப் பள்ளிக்குச் செல்லும் வயதில் பேத்தி இருக்கிறது. இவர்களுக்கு ப்ளஸ் டூ மாணவர்கள் உதவியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர்கள் அனைவருமே கஞ்சா மற்றும் மதுபோதைக்கு அடிமையானவர்கள். முக்கியமாக, சம்பவத்தன்று, விஜயக்குமாரின் தாய், தந்தை, தங்கை ஆகியோர் ஊருக்குச் சென்றுவிட்டதாகவும், வீட்டில் விஜயக்குமார் மட்டும்தான் இருந்தார் என்றும் ஊர் மக்கள் சிலர் கூறுகின்றனர். மேலும், சிறுமியின் சடலத்தில் கட்டப்பட்டிருந்த டி-ஷர்ட் விஜயக்குமாருடையதுதான் என்று அவரது வீட்டில் இருப்பவர்களே சொன்னதாக ஊர் மக்கள் சொல்கின்றனர். சிலர், அது கௌதமுடைய டி-ஷர்ட் என்றும் சொல்கின்றனர். பொதுமக்களே இவ்வளவு விஷயங்களை அடுக்கும்போது, போலீஸ் தரப்பிலோ சரியான ஆதாரங்கள் இல்லை. இந்தக் கிராமத்தில் சிசிடிவி கேமரா இல்லை என்று சப்பைக்கட்டு கட்டி வருகின்றனர்.

இதில் மற்றொரு விஷயத்தையும் நாம் கவனிக்க வேண்டும். சிறுமியின் பெற்றோர் காதலித்து, ஓடிப்போய்த்தான் திருமணம் செய்துள்ளனர். ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே இருவரும் பிரிந்துதான் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். எனவே, இவர்கள்மீது இருக்கும் முன் பகை காரணமாக யாராவது குழந்தையைப் பலி வாங்கிவிட்டார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடந்துவருகிறதாம். இதற்காக, இருவருடைய செல்போன் கால்களின் விவரங்கள் எடுக்கப்பட்டுள்ளன என்று போலீஸ் தரப்பில் கூறுகின்றனர்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில், “புகார் வந்த அடுத்த நாளே குற்றவாளிகளைக் கைது செய்துவிட்டோம்"; என்று எஸ்.பி.பாண்டியராஜன் பேட்டியளித்தார். “பாண்டியராஜனை நடவடிக்கை எடுக்கச் சொன்னதே நான்தான்"; என்று துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார். அதே கோவை மாவட்டத்தில்தான் இந்தச் சம்பவமும் நடந்துள்ளது. சம்பவம் நடந்த நான்காவது நாள்தான் எஸ்.பி. பாண்டியராஜன் சிறுமியின் கிராமத்துக்குச் சென்றிருக்கிறார். இதில் இருந்தே இவர்கள் வழக்கு விசாரணை எவ்வளவு வேகமாக இருக்கிறது என்று தெரிந்துகொள்ளலாம். பொள்ளாச்சி வழக்கில் அனைத்து ஊடகங்களிலும் மாற்றி மாற்றிப் பேட்டியளித்த அ.தி.மு.க தலைவர்கள், இந்தச் சம்பவம் குறித்து வாயே திறக்கவில்லை. “எடப்பாடி அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்"; என்று மேடைக்கு மேடை பேசி வரும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினோ சிறுமியின் மரணத்துக்கு நீதி கேட்டுப் போராடவில்லை. தேர்தல் பணி என்ற ஒற்றைக் காரணத்தைச் சொல்லி அனைவரும் மழுப்பிவிடுகின்றனர். தேர்தல் யாருக்காக நடத்தப்படுகிறது? இவர்கள் எல்லாம் பாகிஸ்தான் நாட்டு மக்களா?

ஏற்கெனவே, பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கோவை போலீஸின் செயல்பாடுகள் கடும் விமர்சனத்துக்குள்ளான நிலையில், தற்போது மீண்டும் அதே செயலைத்தான் கோவை போலீஸார் தொடருகின்றனர். இது ஒருபுறமிருக்க, தேர்தல் நேரம் என்பதால், குற்றவாளிகளை என்கவுன்டரில் சுட்டுத்தள்ளுவதற்கான பணிகளும் நடந்துவருகின்றன என்று தகவல்கள் வருகிறது. பிரசார மேடைகளில் தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்கிறது என்று சொல்லும் அ.தி.மு.க அரசு, அவர்கள் தங்களது கோட்டை என்று சொல்லிக்கொள்ளும், பொள்ளாச்சிக்கும், துடியலூருக்கும் சென்று பாதிக்கப்பட்டவர்களைப் பார்த்தால் தெரிந்துவிடும், இது அமைதிப் பூங்காவா அல்லது அரக்கர்களின் பூங்காவா என்று.

பாலியல் கொலை செய்யப்பட்ட சிறுமியின் வீட்டின் முன்பு காகிதத்தில் எழுதப்பட்டிருந்த வரிகள் இவை.

நீ உறங்குடா மகளே… நீ உறங்கு…

இது கையாளாகாத அரசுகள் ஆளும் நாடு…

நீ உறங்குடா மகளே… நீ உறங்கு…

உடற்கூறு ஆய்வும் செய்யும் வயதா உனக்கு?

நீ உறங்குடா மகளே… நீ உறங்கு…

ஆண்பால் எது… பெண் பால் எது என்று தெரியாத உனக்குப் பாலியல் வன்புணர்வா?

நீ உறங்குடா மகளே… நீ உறங்கு…

உன்னைத் தொடும்போது அவனுக்குத் தெரியவில்லையா நீ மகள் என்று.. நீ தங்கை என்று…?

இங்கு ஆர்ப்பாட்டம், போராட்டம், மறியல் செய்ய ஓராயிரம் சித்தப்பா, பெரியப்பா, அண்ணன்மார்கள் இருக்கிறோம் என்று நீ உறங்கு…

இறைவனுக்கு மட்டும் தலைகுனிந்த இந்தத் தலை வெட்கித் தலைகுனிகிறோம்.. கையாளாகாத சட்டத்தின்கீழ் வாழ்வதை எண்ணி..

நீ உறங்குடா மகளே… நீ உறங்கு…

Original Article

Previous முன்கூட்டியே திறக்கப்படும், 'டாஸ்மாக்'; தேர்தல் ஆணையம் கண்காணிக்குமா?
Next 11 நாள் - 20 மாநிலங்கள் - 91 தொகுதிகள்: துவங்கியது 'கவுன்ட் - டவுன் '

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *