`கழிவறையைப் பயன்படுத்தினால் காசா..?’ கோவை அரசுப் பள்ளி சர்ச்சை


“`நீங்க எல்லாம் எதுக்குப் படிக்க வர்றீங்க? உங்களுக்கெல்லாம் படிப்பு வராது. இனிமே ஸ்கூலுக்கு வராதீங்க' என்று சொல்லி அடிக்கிறார்கள். இப்படித் திட்டி, திட்டியே எங்க ஃப்ரெண்ட்ஸ் பலர இந்த ஸ்கூலவிட்டு நிறுத்திட்டாங்க. இப்படி எங்க, மூணு பேர ஸ்கூலுக்கு வர வேண்டாம்'னு சொல்றாங்க. கெட்ட வார்த்தைல திட்றாங்க. ஸ்கூலுக்குப் போகலன்னா… எங்க வீட்ல அடித்தே கொன்னுடுவாங்க. நாங்கள் தற்கொலை பண்ணலாம்'னு முடிவு பண்ணிருக்கிறோம். எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.."; இப்படிக்கு அசோகபுரம் அரசுப் பெண்கள் உயர்நிலைப் பள்ளி, பத்தாம் வகுப்பு மாணவிகள்… என்ற கடிதம் நமது கைக்குக் கிடைத்தது.

அசோகபுரம் அரசுப் பெண்கள் உயர்நிலைப் பள்ளி இருக்கும் கோவை, துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் பகுதிக்குச் சென்றோம். நாம் அங்கே சென்ற சில நிமிடங்கள் கழித்து மாணவிகள் பள்ளிக்கு வரத்தொடங்கினார்கள். சில மாணவிகள் தயங்கித் தயங்கிப் பேசினார்கள். “அப்படி எல்லாம் இல்ல சார்… இங்க ஹெச்.எம், டீச்சர்ஸ் எல்லாருமே நல்லாத்தான் பேசுவாங்க"; என்று சொல்லிவிட்டு நகர்ந்தனர். நாம், நின்றுகொண்டிருந்த ஸ்பாட்டை மாற்றினோம். அந்த இடத்தில் மாணவிகள் கொஞ்சம் தைரியமாகப் பேசத்தொடங்கினார்கள்.

“அந்த லெட்டர்ல இருக்கறதெல்லாம் உண்மைதான். இங்க ஹெச்.எம், க்ராஃப்ட் டீச்சர் உமா, பி.டி. டீச்சர் வசந்தி மூணு பேரும் ரொம்ப கொடுமை பண்ணுவார்கள். கண்ணுக்கு மை பூசக்கூடாது, தலை சீவறது, பூ வைக்கிறது, பவுடர் பூசறதுக்கெல்லாம் அசிங்கமா கேள்வி கேட்பாங்க. எங்க பாத்ரூம்ல தண்ணீர் பிரச்னையா இருக்கு. கழிவறை போய்ட்டு காலுக்குத் தண்ணி ஊத்தினா ரூ.100 ஃபைன் வாங்கறாங்க. அவங்களோட கழிவறைல எல்லா வசதியும் இருக்கறதால, எங்க கஷ்டம் அவங்களுக்குத் தெரியறது இல்ல. இதற்கு தூய்மைப் பள்ளி விருது வேற கொடுத்துருக்காங்க. ஒவ்வொரு பரீட்சைக்கும் காசு வாங்குறாங்க. இப்பக்கூட அறிவியல் செய்முறைத் தேர்வுக்கு ஒவ்வொருத்தர் கிட்டயும் ரூ.100 வாங்கினாங்க. இப்படி, ஒவ்வொரு வருஷமும் ரூ.1000 வரை வசூல் பண்றாங்க. ஃபீஸ் கட்ட லேட்டான்னா எல்லார் முன்னாடியும் அசிங்கப்படுத்துவாங்க. `சரியாப் படிக்கலை'னு சொல்லி சிலர ஸ்கூல விட்டே நிறுத்திட்டாங்க. அவங்களுக்குப் பிடிக்கலன்னா தொடர்ந்து டார்ச்சர் பண்ணிட்டே இருப்பாங்க"; என்று கதறினர் மாணவிகள்.

மாணவிகளின் குற்றச்சாட்டு தொடர்பாகப் பல்வேறு தரப்புகளில் விசாரித்தோம். “இது ரொம்ப நல்ல ஸ்கூல். ஒவ்வொரு வருஷமும் சராசரியாக 98 சதவிகிதம் ரிசல்ட் வந்துட்டு இருக்கு. இந்த ஹெச்.எம் வந்தப்பறம்தான் நிறைய மாற்றம் வந்துருக்கு. தனியார் பள்ளிங்க மாதிரி, நிறைய காசு வாங்கறாங்க. ஒவ்வொரு பருவம் முடிந்து, புதிய புத்தகங்கள் கொடுக்கும்போது, மாணவர்களிடம் வலுக்கட்டாயமாகப் பழைய புத்தகங்களை வாங்கி அதிலும் காசு பார்க்கிறார்கள். ரிசல்ட் காட்டறதுக்காக டல் ஸ்டூடன்ட்ஸ் 9 பேருக்கு டி.சி கொடுத்து அனுப்பிட்டாங்க. கடந்த ஆண்டு, ஃபீஸ் கட்டவில்லை என்பதற்காக ஒரு மாணவிக்குப் புத்தகமே கொடுக்காமல் வெளியில் நிறுத்தி வைத்திருந்தனர். தனியார் பள்ளிகள்ல சேர முடியலனுதான், ஏழைகள் அரசுப் பள்ளிய தேடி வராங்க. இங்கயும் அதே மாதிரி தொடர்ந்தால் ஏழைகள் எங்கே போவாங்க? 800 பேர் இருந்த இடத்துல இப்ப மாணவிகளின் எண்ணிக்கை பாதியா குறைஞ்சுருச்சு. இப்ப 370 பேர்தான் படிக்கிறார்கள். இப்படியே போனா, எண்ணிக்கை மேலும் குறையும். அது ஆசிரியர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

ஹெச்.எம் சத்யபாமா தனக்குனு ஒரு வட்டம் வெச்சுருக்காங்க. அவங்களுக்கு சில ஆசிரியர்கள் துணையா இருக்காங்க. அவங்களுக்குள்ள நிறைய அண்டர்ஸ்டாண்டிங் இருக்கு. சத்யபாமாவுக்காக அவங்களும், அவங்களுக்காக சத்யபாமாவும் நிறைய உதவி பண்ணுவார்கள். சத்யபாமாவுக்கு விருதுகள் வாங்க வேண்டுமென்று ஆசை. அதற்காகத்தான் இவ்வளவும். இத்தனை வருஷமா இந்த விஷயங்கள் எல்லாம் வெளிய வராம இருந்துச்சு. ஆனா, இந்த வருஷம் உயர் அதிகாரிகள் வரைக்கும் இந்த விஷயம் போய்டுச்சு. அப்பவும், இவங்க அப்படியேதான் இருக்காங்க"; என்று கூறினார்கள்.

இதுதொடர்பாகப் பள்ளித் தலைமை ஆசிரியர் சத்யபாமாவைச் சந்தித்து விளக்கம் கேட்டோம். “நாலு வருஷத்துக்கு முன்னாடி இந்தப் பள்ளியோட நிலைமை வேற மாதிரி இருந்துச்சு. காம்பவுண்ட் சுவர் இல்லை. தளம் இல்லை. தரமான கழிவறை இல்லை. புதர்கள் வளர்ந்து பாம்புகள் சுத்திட்டு இருந்துச்சு. நான் வந்தப்பறம்தான் ஸ்பான்ஸர்கள் பிடிச்சு நிறைய வேலைகள் பண்ணிருக்கிறோம். கழிவறை கட்டி.. தளம் போட்டு காம்பவுண்ட் சுவர் கட்டிருக்கோம். சொல்லப்போனா.. இங்க எங்களோட கை காச போட்டு பல வேலைகள் பண்ணிருக்கிறோம். `பணம் வசூல் பண்றோம்.. கெட்ட வார்த்தைல திட்றோம்'னு சொல்றது எல்லாம் பொய். போன வருஷம் இரண்டு கால்களும் இல்லாத ஒரு மாணவிக்கு, மருத்துவ உதவி செஞ்சு பத்தாம் வகுப்பு தேர்ச்சி அடைய வெச்சோம். `நாப்கின்ஸ சரியா குப்பைத் தொட்டில போடுங்க'னு பல தடவை சொல்லிட்டோம். ஆனா, பலர் அதைக் கேட்பதில்லை. அதைச் சுத்தம் செய்ய இப்ப யாருமே முன் வர்றது கிடையாது. படிக்கற வயசுல சில பொண்ணுங்க மேக் அப் பண்றது.. பசங்ககூடச் சுத்தறது'னு எல்லாம் பண்ணிட்டு இருக்காங்க. அதைக் கண்டிக்க வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கு. ஆனா, கெட்டவார்த்தை எல்லாம் பயன்படுத்தவே இல்ல. சில மாணவிகள், கெட்டவார்த்தை பேசுவாங்க, ஒரு மாணவி டீச்சரையே அடிச்சுருக்காங்க. நான் இங்க இருப்பது பிடிக்காத சிலர்தான் இந்த மாதிரி பொய் தகவலைப் பரப்பியிருக்கிறார்கள்"; என்றார்.

பள்ளி வளாகம் முழுவதும் வலம் வந்தோம். சில மாணவிகள் வகுப்பறைக்கு முன்பு முட்டிப் போட்டிருந்தனர். சில மாணவிகள், துடைப்பங்களுடன் மைதானத்தைச் சுத்தம் செய்துகொண்டிருந்தனர். கழிவறைகள் பராமரிப்பின்றி காணப்பட்டன. சாலை ஓரத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த ஓர் ஆசாமி, லுங்கியுடன் மிகவும் மோசமான நிலையில் வகுப்பறை ஜன்னலை நோக்கி நின்றுகொண்டிருந்தார். நாம் அங்குச் சென்று, “என்ன'' என்று கேட்டதும், அந்த நபர் அங்கிருந்து உடனடியாக நகர்ந்துவிட்டார். “இதுபோன்ற ஆசாமிகளின் தொந்தரவு வாடிக்கையாகிவிட்டது"; என்று மாணவிகளும், ஆசிரியர்களும் வேதனை தெரிவித்தனர்.

இதுகுறித்து கோவை மாவட்ட கல்வி அலுவலர் கீதாவைத் தொடர்புகொண்டோம். “ஏற்கெனவே அந்தப் பள்ளியில் நிறைய புகார்கள் வந்திருக்கின்றன. அங்கு மீண்டும் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கிறேன்"; என்றார்.

இது அசோகபுரம் பள்ளி மாணவர்களுக்கான பிரச்னை மட்டுமல்ல. பெரும்பாலான அரசுப் பள்ளிகளின் நிலை இதுதான். சமூகமே மிகப்பெரிய மாற்றத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும்போது, மாணவிகளின் குணநலன்கள் மாறிவிட்டது என்று அவர்களை மட்டும் குறைசொல்வது இதற்குத் தீர்வாகாது. மேலும், இந்தப் பருவத்தில் மாணவிகளின் எண்ணங்களைப் புரிந்துகொண்டு, அவர்களை வழிநடத்த வேண்டிய கடமை அனைவருக்கும் இருக்கிறது. நன்கு படிக்கும் மாணவர்களை வைத்து ரிசல்ட் காண்பிப்பது சாதனை அல்ல. படிப்பில் ஆர்வமில்லாத மாணவர்களையும் தேர்ச்சியடைய வைப்பதுதான் சாதனை.

குறிப்பாக, தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் சுத்தமான கழிவறைகளைக் காண்பது எல்லாம் மிகவும் அரிதான விஷயம். பள்ளிகளில் பாலியல் கல்வி கொண்டுவருவது, மாணவர்களுடன் பெற்றோர் நல்ல உறவில் இருப்பது போன்றவைதாம் இதற்கு நிரந்தரத் தீர்வுகளைக் கொடுக்கும். அதை விட்டுவிட்டு அரசுப் பள்ளி மாணவர்களைப் பள்ளியிலிருந்து நீக்குவது என்பது ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் செயல்.

அசோகபுரம் பள்ளியிலிருந்து வெளியில் வந்தபோது, சுவரில் தீயினாற் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு என்ற திருக்குறள் எழுதப்பட்டிருந்ததைப் பார்த்தோம். அது மாணவர்களுக்கு மட்டுமல்ல. அனைவருக்கும் பொருந்தும்.

Original Article

Previous விகடன் போஸ்ட்: முகிலனும் சவால்களும், சபரீசன் மீதான சீற்றம், பொள்ளாச்சி 'பாலியல்' பயங்கரம்!
Next ராணுவ அமைச்சகத்தில், 'ரபேல்' ஆவணங்கள்... திருட்டு!

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *