”ஃபேஸ்புக் இந்தியாவில் தோன்றியிருந்தால், மார்க் சிறையில் இருப்பார்!” – செஹ்லா ரஷித்


`ஜோர் ஸே போலோ – ஆசாதி’ டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜே.என்.யூ) 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமார் கைது செய்யப்பட்ட பிறகு, துணைத் தலைவராக இருந்து போராட்டத்தை முன்னெடுத்துச் சென்று ‘உரக்கச் சொல்வோம் – சுதந்திரம்’ என ஒலித்த குரலுக்குச் சொந்தக்காரர் செஹ்லா ரஷித் ஷோரா. அண்மையில் சென்னைக்கு அவர் வந்திருந்தபோது நமக்கு அளித்த பேட்டி..

“யார் இந்த செஹ்லா ரஷித்?";

“என்னை ஒரு செயற்பாட்டாளராக அடையாளப்படுத்தவே விரும்புகிறேன். எந்த ஒரு துறையில் நான் பணியாற்றினாலும் சமூகநீதி சார்ந்து செயல்பட வேண்டும் என்பது என்னுடைய கொள்கை. ஒடுக்கப்பட்டவர்கள், சிறுபான்மையினர் மற்றும் பாலினம் சார்ந்த உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டுமென விரும்புகிறேன்”.

“சாஃப்ட்வேர் துறையிலிருந்து மாணவச் செயற்பாட்டாளர் என்கிற பரிணாமம் எவ்வாறு நிகழ்ந்தது?";

“நான் காஷ்மீரிலிருந்து வருகிறேன். அங்குள்ள சூழலில் ஆக்டிவிசம் எல்லாம் சாத்தியப்படாது. அரசியல் என்பதே ஒரு மூடப்பழக்கமாகப்
பார்க்கப்படும். என்ஜினீயராகச் சிறிதுகாலம் வேலை பார்த்தேன். பின்னர், டெல்லியில் ஜே.என்.யூ. தேர்வுகளுக்குத் தயாராகி வந்தபோது நடைபெற்ற `16 டிசம்பர் இயக்கம் (நிர்பயா) தான்' என்னை அரசியல்மயப்படுத்தியது. அப்போதுதான். பாலினம் சார்ந்த பிரச்னைகளைப் பற்றித் தெரிந்துகொள்ள முடிந்தது. ஆனாலும், எனக்குள் ஒரு போதாமை இருந்துகொண்டே இருந்தது. அதுதான் என்னை ஜே.என்.யூ-வுக்கு அழைத்து வந்தது”.

“தமிழகத்தையும், திராவிட இயக்கத்தையும் எவ்வாறு பார்க்கிறீர்கள்?";

“கலாசார ரீதியாக வேரூன்றிய இயக்கம் என்பதால் திராவிட இயக்கம் இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானது. ஏனென்றால். பி.ஜே.பி-யின் பாசிசத்தை எதிர்கொள்ள இதுபோன்ற கலாசார ரீதியாக வேரூன்றிய இயக்கம்தான் தேவைப்படுகிறது. திராவிட இயக்கங்கள் மிகவும் முற்போக்கான சிந்தனைகளின் மூலம் உருவானவை. இங்குள்ள பெண்கள் மிகவும் சுதந்திரமாக இருப்பதைப் பார்க்க முடிகிறது. வட இந்திய மாநிலங்களைக் காட்டிலும் பல்வேறு விஷயங்களிலும் தமிழகம் முன்னேறி இருக்கிறது”.

“ஜே.என்.யூ-வில் தற்போதைய சூழல்கள் எவ்வாறு உள்ளன?";

“ஜே,என்.யூ என்று மட்டுமல்ல, இன்றைய பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களும் மிகவும் மோசமான அடக்குமுறைகளுக்கு உள்ளாகியுள்ளன. ஜே.என்.யூ, நாளுக்குநாள் அழிக்கப்பட்டு வருகிறது. முதலாவதாக மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது. போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாத சூழலில் புதிதாக என்ஜினீயரிங் பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், ஜனநாயக நடவடிக்கையான மாணவர்களின் போராட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மீது அபராதங்கள் விதிக்கப்படுகின்றன. இடதுசாரி, அம்பேத்கரிய அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் தொடர்ந்து குறிவைக்கப்படுகின்றனர். ஆனால் ஏ.பி.வி.பி. உள்ளிட்ட வலதுசாரி அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் மீது எந்தவொரு நடவடிக்கையும் இருக்காது. இந்த அரசின் பதவிக்காலம் முடிகிறபோது ஜே,என்.யூ அதன் பாரம்பர்ய மதிப்பை முற்றிலும் இழந்துவிடும்”.

“இந்திய உயர்கல்வி நிறுவனங்களின் எதிர்காலம் என்னவாக இருக்கும்?";

“பல்கலைக்கழக மானியக்குழுவைக் கலைப்பதில் அரசு முனைப்புடன் இருக்கிறது. தத்துவம், ஆய்வுகள் இனிப் படிப்புகளாகக் கருதப்படாது. தொழில்முறை சார்ந்த படிப்புகளே எங்கும் வியாபித்து இருக்கும். ஆராய்ச்சிப் படிப்புகளில் ஒரு நாடு முதலீடு செய்யவில்லை என்றால், அந்நாட்டில் வளர்ச்சி என்பதே இருக்காது. இந்தியா எந்தவொரு துறையிலும் முன்னோடியாக இருக்க முடியாது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை ஜே.என்.யூ, ஐ.ஐ.டி மாதிரியான நிறுவனங்களை அனைத்து ஊர்களிலும் நிறுவ வேண்டும். ஆராய்ச்சித் துறை மேம்படச் சுதந்திரமான பொதுத்துறை முதலீடுகளும், கருத்துச் சுதந்திரமும் தேவை. வெளிநாடுகளில் உள்ளதைப் போன்று இந்தியாவிலும் ஆய்வுத் துறைகளில் அரசின் கட்டுப்பாடு இருக்கக் கூடாது. இங்கே படைப்பாற்றலுக்கு மதிப்பளிக்கப்படுவதில்லை. ஃபேஸ்புக் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தால் அதன் நிறுவனர் சிறையில் அடைக்கப்பட்டிருப்பார். புதிய ஆய்வுகளுக்கு மதிப்போ, ஊக்கமோ இந்தியாவில் அளிக்கப்படுவதில்லை”.

“ஜம்மு-காஷ்மீரில் உள்ள இளைஞர்களின் மனநிலை என்னவாக இருக்கிறது?";

“காஷ்மீரில் இந்தியாவுக்கு ஆதரவானவர்களும் இருக்கிறார்கள், பாகிஸ்தானிற்கு ஆதரவானவர்களும் இருக்கிறார்கள். இவர்கள் அல்லாமல் மூன்று காஷ்மீர் பகுதிகளும் ஒன்றாக இணைந்து சுதந்திரமான ஒரு பிரதேசமாக இருக்க விரும்புபவர்களும் இருக்கிறார்கள். ஆனால் இப்போது உள்ள சூழலில் இந்தியாவுக்கு ஆதரவானவர்கள்கூட மிகவும் கோபத்துடன் இருக்கின்றனர். மனித உரிமை மீறல்கள்தான் காஷ்மீரில் அன்றாட வாடிக்கையாக இருக்கிறது. அங்கு இராணுவம் மட்டுமே இந்தியாவின் முகம். அதுதான் அங்கே பல்வேறு விரிசல்களை உருவாக்குகிறது”.

“காஷ்மீர் விவகாரத்தை காங்கிரஸ்-பி.ஜே.பி. எவ்வாறு கையாளுகின்றன?";

“காஷ்மீரில் சிக்கல் இருப்பது அனைவரும் அறிந்த ரகசியமே. ஆனால், அதை பி.ஜே.பி. மேலும் சீர்குலைத்து 2019 தேர்தலில் அரசியல் லாபத்துக்காகப் பயன்படுத்திக்கொள்ள பார்க்கிறது. ராணுவம் `ஆபரேஷன் ஆல் அவுட்' என ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது. காஷ்மீரில் ஆயுதக் கிளர்ச்சி என்பது 1994-ம் ஆண்டிலேயே முடிந்து விட்டது. ஆனால், தற்போது பி.ஜே.பி. அரசின் கொள்கைகள், அந்தச் சூழ்நிலை மீண்டும் வருவதற்கான சாத்தியங்களை உருவாக்குகிறது. முன்னாள் ராணுவத் தளபதி வி.கே சிங், பி.ஜே.பி-யில் சேர்ந்தது தவறான முன்னுதாரணமாக அமைந்துவிட்டது. தற்போதைய ராணுவத் தளபதி பிபின் ராவத் பி.ஜே.பி-க்கு ஆதரவானக் கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். எதிர்காலத்தில் அவரும் ஏதாவது பதவிக்கு ஆசைப்பட்டுச் செயல்படுகிறாரா என்ற சந்தேகம் எழுகிறது. காங்கிரஸ் ஆட்சியில் மனித உரிமை மீறல் பிரச்னைகளை எழுப்ப முடியும். தற்போது அதற்கான சூழல்கூட இல்லை. மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு வருகின்றனர்”.

“ஆன்டி இந்தியன் (Anti Nationals) என்கிற பதம் தற்போது பரவலான பயன்பாட்டில் இருந்து வருகிறதே…?!";

“இன்றைய இந்தியாவில் பிரதமர் மோடி, அமித் ஷா பக்தராக இல்லாத எவருமே 'ஆன்டி இந்தியன்'தான். மோடி – அமித் ஷா பக்தர்களின் தாக்குதலுக்கு உள்ளான சுஷ்மா ஸ்வராஜ் கூட 'ஆன்டி இந்தியன்'தான்";.

“தற்போது இணையத்தில் அதிகரித்து வரும் ட்ரோல்களை எவ்வாறு பார்க்கிறீர்கள்?";

அது வெறும் ட்ரோல்கள் அல்ல, இணையத்தில் உலவி வரும் கொலைக் கும்பல். இணையத்தில எது எழுதினாலும் நம்முடைய அடையாளத்தைக் குறிவைத்து தாக்கப்படுகிறோம். இது நம் சமூகத்தில் ஏற்பட்டு வரும் மோசமான மாற்றங்களைத்தான் காட்டுகிறது. முதலில் இஸ்லாமியர்கள், அடுத்து தலித்துகள் தாக்கப்பட்டனர். சட்டத்தின் மீதான பயத்தில்தான் குற்றங்கள் நடப்பது குறையும். கொலைக் குற்றவாளிகளை மத்திய அமைச்சர் நேரில் சென்று மாலை அணிவித்து வரவேற்பது அவர்களுக்குச் சட்டத்தின் பிடியிலிருந்து கட்டவிழ்த்து விடுகிற உணர்வைத்தான் தருகின்றன. இத்தகைய ஒரு சூழலைதான் இணைய ட்ரோல் கலாசாரம் உருவாக்கியிருக்கிறது.

“தேசிய மைய நீரோட்டத்தில் இன்றைய சூழலில் இஸ்லாமியர்களின் நிலை என்னவாக இருக்கிறது?";

`இந்தியாவில் அனைத்துச் சமூகப் பிரிவுகளிலுமே இஸ்லாமியர்கள்தான் பின்தங்கியிருக்கிறார்கள்' என சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பசுவின் பெயரால் நடத்தப்படும் தாக்குதல்கள், நாஜி ஜெர்மனியில் யூதர்களுக்கு நடந்ததைவிடவும் எந்த விதத்திலும் குறைவானது இல்லை. அஸாம் தேசியக் குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி) இஸ்லாமியர்களுக்கு எதிராக அரசாங்கத்தால் ஊக்குவிக்கப்படுகிற அரச பயங்கரவாதம். பிரதமர் நரேந்திர மோடி சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களில் கள்ள மௌனம் காத்து ஒப்புதல் அளித்து வருகிறார். இதற்குச் சில ஊடகங்களும் உதவிவருகின்றன.

“தேர்தலில் போட்டியிடும் திட்டம் ஏதும் இருக்கிறதா?";

நான் என்னை ஒரு ஆக்டிவிஸ்டாகப் பார்க்கிறேன். தேர்தல் அரசியல் என்கிற ஒற்றை வட்டத்தில் அதைக் குறுக்கிப் பார்க்கவேண்டாம்.­­­­­ நான் ஒரு பத்திரிகையாளராக இருந்தாலோ, ஆசிரியராக இருந்தாலோ அதை நான் என்னுடைய செயல்பாடுகளைச் செய்வதற்கான களமாகப் பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறேன். சமூக மாற்றத்துக்காக உழைக்க வேண்டும். அதற்காகக் கிடைக்கிற அனைத்து வாய்ப்பையும் பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறேன். அது நாடாளுமன்றமாக இருந்தாலும்கூட…

Original Article

Previous தை அமாவாசை : கும்பமேளாவில் 3 கோடி பேர் புனிதநீராடல்
Next முதல்வர் போர்க்கொடி; ஆட்டம் காண்கிறது அரசு

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *