“தி.மு.க-வைத் தோற்கடித்தது யார் தெரியுமா?”- தி.மு.க. முன்னாள் அமைச்சரின் கருத்து


தி.மு.க-வைத் தோற்கடிக்க யாரும் பிறந்து வரவில்லை என்று முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் கூறியுள்ளார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஜுரம் நாடுமுழுவதும் இப்போதே பரவ ஆரம்பித்துவிட்டது. தமிழகம் முழுக்க ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்து ஆலோசனைக்கூட்டத்தை முடுக்கிவிட்டுள்ளது தி.மு.க. கோவையில் நடந்த ஆலோசனைக்கூடத்தில் அனல் பறந்தது.

கோவை நாடாளுமன்றத்தொகுதிக்கு உட்பட்ட கோவை தெற்கு, கோவை வடக்கு மற்றும் சிங்காநல்லூர் ஆகிய மூன்று தொகுதிகளுக்குமான நாடாளுமன்றத் தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனைக்கூட்டம் மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த மூன்று தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளரான முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தன், பொங்கலூர் பழனிசாமி, சிங்காநல்லூர் எம்.எல்.ஏ கார்த்திக் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மேடையேறிய கட்சி நிர்வாகிகளில் பலரும் தங்களின் ஆதங்கங்களைக் கொட்டித் தீர்த்தனர். கோவை தொகுதியைக் கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்காமல் நம் கட்சியைச் சேர்ந்தவர்களே போட்டியிட வேண்டும் என்றும், அப்போதுதான் வெற்றிபெற முடியும் என்றும் குறிப்பிட்டனர். ஆளும் அ.தி.மு.க அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை விமர்சிக்கவும் தி.மு.க. நிர்வாகிகள் தவறவில்லை. “பணத்தை வைத்து அவர் ஜெயிக்கப் பார்ப்பார்; நாம் ஒன்று சேர்ந்து அதை முறியடிக்க வேண்டும்"; என்பதுவரை நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

மேடையேறிய பெண் நிர்வாகி ஒருவர், “இங்கதான் ஒண்ணா வேலை செய்யணும். ஒண்ணா வேலை செய்யணும்னு சொல்வாங்க. களத்துக்குப் போனால் அந்தப் பொம்பள சொல்ற பேச்சைக் கேட்காதேன்னு உள்ளுக்குள்ளேயே பாலிடிக்ஸ் பண்ணுவாங்க. மேடையில் மட்டும் பேசினால் பத்தாது. களத்திலும் ஒன்று சேர்ந்து பணியாற்ற வேண்டும். நமக்குப் பிடிச்சவங்களோ, பிடிக்காதவங்களோ கட்சித் தலைமை யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் அவருடைய வெற்றிக்காக உழைக்க வேண்டும்"; என்று முழங்க. ஒட்டுமொத்த நிர்வாகிகளும் ஒடுங்கிப் போனார்கள்.

எல்லோருடைய பேச்சையும் உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருந்த முல்லை வேந்தன் இறுதியாக மைக் பிடித்தார். “நான் இப்போது சொல்லப்போகிற செய்தி உங்களுக்குக் கசப்பாகத்தான் இருக்கும். ஆனால், அதைக்கேட்டு சரி செய்துகொண்டால்தான் நாம் வெற்றிபெற முடியும். கடந்த காலங்களில் எதனால் தோற்றோம்? என்று கேட்டால் நம்மாலே நாம் தோற்றுப்போனாம். நம்மைத் தோற்கடிப்பதற்கு எவனும் பிறக்கவில்லை. நம்மை தோற்கடிப்பதற்கு நம்மை நாமே தயார்படுத்திக் கொண்டோம். அந்த நிலை ஏன் உருவானது? `தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், கலைஞரும் கால்நடையாக நடந்தார்கள். திண்ணையில் படுத்து உறங்கி பிரசாரம் செய்தார்கள். ஒலிபெருக்கி இல்லாமலேயே முழங்கினார்கள். பட்டினியோடுகூட பேசினார்கள். இதெல்லாம் கடந்த காலம்! அது கொள்கைக்காக மாத்திரமே இருந்தது. எத்தனையோ தலைவர்கள் அன்றைக்கு சுயநலமில்லாமல் உழைத்து இந்த இயக்கத்தை வளர்த்தார்கள்.

அவர்களெல்லாம் இருக்கும்போது ஒரு கட்டுப்பாடு இருந்தது. ஒரு பயம் இருந்தது. அவர்கள் சொல்வதைக் கேட்கவேண்டும் என்ற குணம் நிர்வாகிகளுக்கு இருந்தது. போகப்போக அது சுத்தமாக மழுங்கிப்போனது. காரணம், ஆட்சிக்கு வந்தோம். அதிகாரத்தைக் கைப்பற்றினோம். சிலபேர் கடமையைச் செய்தார்கள். தடம் மாறிய காரணத்தால் சிலபேர் மேல்மாடிக்குச் சென்றார்கள். சிலர் கீழே நின்றார்கள். கீழே நின்றவர்கள் யோசித்தார்கள். குப்பையிலே கிடந்தவனெல்லாம் இன்று கோபுரத்தில் இருக்கிறான். பேரறிஞர் அண்ணா கட்சியைத் தொடங்கியபோது இந்த இயக்கத்தில் சேர்ந்தோம். ஆனால், இன்றைக்குப் பட்டினியில் கிடக்கிறோம் ஏன் இந்த நிலை என்று எண்ணிப்பார்த்து, நமக்கேன் வம்பு என்று சிலர் ஒதுங்க ஆரம்பித்து விட்டார்கள்.

தவிர, சேவை மனப்பான்மையும், கடமை உணர்வும் மெள்ளமெள்ள குறைந்துபோனது. நம்மிலே யார் வெற்றிப்பெற்றால் என்ன? இயக்கம் வெற்றிபெற வேண்டும் என்ற நிலையிலிருந்து, யார் தோற்றுப்போனால் என்ன, யார் எக்கேடுகெட்டுப்போனால் என்ன? நான் வெற்றிபெற வேண்டும். நான் பதவிக்கு வர வேண்டும் என்ற எண்ணம் உருவானது. கொஞ்ச காலத்துக்குப் பிறகு அதுவும்போய், நான் மட்டும்தான் பதவிக்கு வரவேண்டும் வேறு யாரும் வரக் கூடாது என்ற எண்ணம் மேலோங்கியது. நீங்களெல்லாம் தவறாக எடுத்துக்கொள்ளக் கூடாது. கோவை மாவட்டம் என்று சொன்னாலே கோஷ்டிப் பூசல் அதிகம் என்ற எண்ணம் தலைவர் காலத்திலிருந்தே இருந்து வருகிறது.

கோவையிலிருந்து யாரேனும் தனியாகச் சென்றால், தனியாக வந்துவிட்டாயா? என்று தலைவர் வருந்துவார். எல்லோரும் இணைந்து சென்றால் மகிழ்வார். அதேவேளையில் இரு அணிகளாக இருப்பதையும் தலைவர் விரும்புவார். இரண்டுபேரையும் தூக்கிவிடுவார். இரண்டுபேரும் மேலே வர வேண்டும். ஒருவருக்கொருவர் போட்டி போட்டால்தான் இயக்கம் வளரும் என்ற எண்ணத்தோடு தலைவர் கலைஞர் இந்த இயக்கத்தை நடத்தினார். இந்த இயக்கமும் அப்படித்தான் வளர்ந்தது. தேர்தலில் சீட்டு வழங்கும்போது சில நேரங்களில் விபத்து போன்று யாருக்கு கிடைக்கக்கூடாதோ அவருக்குக் கிடைத்ததன் ஆபத்து ஒட்டுமொத்தமாகக் கட்சியில் புற்றுநோய்போல புரையோடிப் போய்விட்டது. இப்போது அந்த நிலை மாறியுள்ளது. சில நேரங்களில் கோவையில் தி.மு.க வெற்றி பெற்றிருந்தாலும் பல நேரங்களில் தோல்வியைத் தழுவியிருக்கிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாதிக்குமேல் வாக்குகளை இழந்திருக்கிறது. அதற்கு யார் என்று கேட்டால் கோவை வாக்களர்கள் அல்ல. இங்கிருக்கும் நம் கட்சிக்காரர்கள்தான். நாம் மட்டும் சரியாக இருந்துவிட்டால் தேர்தலில் வெற்றிபெற முடியும்.

நீங்கள் கேட்கலாம், நாங்கள் நாற்பது ஐம்பதுபேர் சரியாக இருந்துவிட்டால் எப்படி வெற்றிபெற முடியும் என்று? இவர்கள்தான் பட்டாளத்து சிப்பாய்கள் என்று முதலிலேயே நாம் சொல்லிவிடுகிறோம். இதை எதிரி பார்க்கிறார். இதில் யாரை எப்படிப் பணியவைக்கலாம். பணிசெய்யவிடாமல் தடுக்கலாம் என்று வேலை செய்கிறார்கள். அப்படியானவர்களுக்கு யாரும் அடிபணிந்து விடக் கூடாது. தன்மானத்தோடும், சுயமரியாதையோடும், கொள்கையோடும் வாழ வேண்டும். கடந்த தேர்தலில் பூத் கமிட்டி உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டிருந்தவர்களுக்கு போன்செய்து பேசினேன். எனக்கு அதிர்ச்சி. அதில் பலருக்கு தாங்கள்தான் பூத் கமிட்டி உறுப்பினர்கள் என்பதே தெரியவில்லை. சேர்ப்பவர்களும் அவர்களுக்குச் சொல்வதில்லை. பிறகு நாம் எப்படி வெற்றிபெற முடியும்?

உங்களுக்குப் பிடிக்காதவர்கள் போட்டியிட்டாலும் நீங்கள் உண்மையாக இயக்கத்துக்கு வேலைசெய்யவேண்டும். அவர் வெற்றிபெற்றால்தான் நான் தி.மு.ககாரன் என்று உங்களால் ரோட்டில் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு நடக்க முடியும். நம் கட்சிக்கும் மரியாதை கிடைக்கும். அதைவிட்டுவிட்டு அவரைத் தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு தேர்தலின்போது பணி செய்யாமல் இருந்தால், அவர் மட்டும் தோற்பதில்லை. நீங்களும் சேர்ந்தே தோல்விடைகிறீர்கள். இந்த இயக்கமும் தோல்வியடைகிறது. ஆகையால் இயக்கத்துக்காக மட்டும் வேலை செய்யுங்கள். உங்கள் பணிக்கான பலன் நிச்சயம் உங்களுக்கு வந்து சேரும்"; என்று முல்லைவேந்தன் முடித்தபோது அரங்கம் அதிர்ந்தது.

Original Article

Previous இந்தியப் பொருளாதாரத்தை மாற்றியமைக்குமா கேஸ் ஹைட்ரேட்ஸ்? #GasHydrates
Next UPI முதல் கூகுள் பே வரை... புஷ் பேமன்ட்கள் எப்படி எளிதில் நம்மை ஈர்க்கின்றன?

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *