குட்கா விவகாரம்… அடுத்து என்ன? பின்னணி விவரங்கள்!


தவறுகளைத் தட்டிக் கேட்பவர்களே தவறு செய்துவிட்டு, குற்றவாளிகளாக நிற்பதுதான் தமிழகத்தின் சாபக்கேடு. தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருள்களைக் கடைகளில் தாராளமாகச் சப்ளை செய்வதற்குச் சுதந்திரமாக வாயிற்கதவுகளைத் திறந்துவிட்டு, தற்போது குற்றம்சாட்டப்பட்டு, கூண்டில் ஏறி நிற்கிறார்கள் அமைச்சர் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் சிலர். 2016-ம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் மாதவ ராவ் என்பவருக்குச் சொந்தமான குடோனில் வருமானவரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையின்போது, அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அங்கு கிடைத்த ஒரு டைரியில், குட்கா சப்ளை மற்றும் விற்பனைக்காக யார், யாருக்கெல்லாம் லஞ்சம் கொடுக்கப்பட்டது என்பது பற்றிய தகவல்கள் அம்பலமாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அதன் தொடர் நடவடிக்கையாக, கடந்த ஒரு வாரத்துக்கு முன்பே குட்கா விவகாரம் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், போலீஸ் டி.ஜி.பி ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படலாம் என விகடன் இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டது. அடுத்த ஐந்து நாள்களில் டெல்லியிலிருந்து வந்த சி.பி.ஐ அதிகாரிகள், 'ஸ்கெட்ச்' போட்டு இந்தச் சோதனையை நடத்தி முடித்துள்ளனர். குட்கா விவகாரம் அம்பலமாகி மூன்று ஆண்டுகள் ஆன பின்னரும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், தற்போது சி.பி.ஐ அதிகாரிகளின் அதிரடி ரெய்டால் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளது இந்தப் பிரச்னை. சி.பி.ஐ ரெய்டு விவகாரத்தால் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் டி.ஜி.பி ராஜேந்திரன் ஆகியோர் தங்களின் பதவியை ராஜினாமா செய்யக்கோரி நெருக்கடி எழுந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.

டி.ஜி.பி வீட்டில் சோதனை!

சென்னை முகப்பேர் பகுதியில் உள்ள காவல்துறை டி.ஜி.பி ராஜேந்திரன் வீட்டில் செப்டம்பர் 5-ம் தேதி காலை 7.30 மணிக்குத் தொடங்கிய சி.பி.ஐ சோதனை மாலை 6 மணிவரை நடைபெற்றது. 10 பேர் கொண்ட டீம் இந்த விசாரணையில் இறங்கினர். குட்கா பதுக்கி வைத்திருந்த குடோன் உரிமையாளர் மாதவ ராவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையின்போது, கிடைக்கப்பெற்ற தகவல்கள் மற்றும் கடந்தவாரம் சி.பி.ஐ அதிகாரிகளின் விசாரணையின்போது மாதவ ராவ் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் டி.ஜி.பி ராஜேந்திரனிடம் விசாரணை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், மாதவ ராவிடமிருந்து லஞ்சமாகப் பெறப்பட்ட பணம், காசோலையாகப் பெறப்பட்டதா அல்லது ரொக்கமாகப் பெறப்பட்டதா என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது. விசாரணையின் முடிவில் டி.ஜி.பி ராஜேந்திரன் வீட்டிலிருந்து சில ஆவணங்களை சி.பி.ஐ அதிகாரிகள் எடுத்துச் சென்றதாகவும் சொல்கிறார்கள் சி.பி.ஐ-க்கு நெருக்கமானர்கள். மேலும், இந்த ரெய்டைத் தொடர்ந்து டி.ஜி.பி ராஜேந்திரன், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேற்று அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசியது மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த டி.ஜி.பி யார்?

முதல்வர் எடப்பாடியுடனான சந்திப்பின்போது, 'குட்கா முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டோடு நான் பணியாற்ற விரும்பவில்லை' என்று டி.கே.ராஜேந்திரன் தெரிவித்தாராம். அதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து 'டைரியில் எழுதி வைத்ததை காரணம் காட்டி நடவடிக்கை எடுக்க முடியாது. அப்படியான முகாந்திரம் ஏதும் இல்லாதபோது நீங்கள் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும்? எனவே, நீங்கள் ராஜினாமா செய்யத் தேவையில்லை' என்று சொன்னதாகக் கூறப்படுகிறது. என்றாலும், ராஜேந்திரன் டி.ஜி.பி பதவியில் நீடிக்கும் மனநிலையில் இல்லை என்று சொல்கிறார்கள் காவல்துறையில் விவரம் அறிந்தவர்கள். ராஜேந்திரனின் பதவிக்காலம் கடந்த ஆண்டே முடிவடைய இருந்த நிலையில், அவருக்கு இரண்டு ஆண்டுக்காலம் பதவி நீட்டிப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. பதவி நீட்டிப்பில் உள்ள டி.ஜி.பி-யை வேறு பிரிவுக்கு மாற்றக்கூடிய சூழ்நிலையும் இல்லை என்பதால், அவர் ராஜினாமா செய்ய நேரும்பட்சத்தில் பணி ஓய்வுபெற்று வீட்டுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். இதையடுத்து, தமிழகத்தின் அடுத்த காவல்துறைத் தலைவர் (டி.ஜி.பி) பதவிக்கு சீனியாரிட்டியில் உள்ள அதிகாரி ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் நடவடிக்கைகளைத் தமிழக அரசு தொடங்கிவிட்டதாக, காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சி.பி.ஐ பிளான் இதுதானா?

டி.கே.ராஜேந்திரன் ராஜினாமா செய்தால், அவருக்குப் பதிலாக டி.ஜி.பி ரேங்கில் சீனியாரிட்டி அடிப்படையில் அடுத்த இடத்தில் உள்ளவர்களான ஜே.கே.திரிபாதியோ அல்லது மகேந்திரனோ புதிய டி.ஜி.பி-யாக நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது. ராஜேந்திரனுக்கு அடுத்த நிலையில் இந்த இருவர் மட்டுமே உள்ளனர். அதனால் ராஜேந்திரன் இருந்த இடத்தில், இந்த இருவரில் ஒருவர் நியமிக்கப்படலாம் என்றும் சொல்கின்றனர்.

'இந்த வழக்கை எப்படியாவது உடைக்க வேண்டும்' எனத் தமிழக அரசு சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தியதாகவும், வழக்கு தீவிரமடைந்தால் அரசுக்கு கெட்டபெயர் ஏற்பட்டுவிடும் என்று கருதுவதாகவும் அதன் காரணமாகவே டி.ஜி.பி ராஜேந்திரனை ராஜினாமா செய்ய வேண்டாம் என்று முதல்வர் தரப்பில் கேட்டுக்கொண்டதாகவும் கூறுகின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

தமிழக அரசின் நிலைப்பாடு இப்படியென்றால், சி.பி.ஐ அதிகாரிகள் இந்த விவகாரத்தில் தீவிரமாக இருப்பதாகக் கூறுகிறார்கள். குறிப்பாக, குட்கா விவகாரத்தில், முதல் தகவல் அறிக்கையில் (FIR ) இதுவரை 17 பேர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் மற்றும் காவல்துறை முன்னாள், இந்நாள் அதிகாரிகள் ஆகிய மூன்றுபேர் மட்டும் தற்காலிகமாகச் சேர்க்கப்படவில்லை. எனவே, அண்மையில் சி.பி.ஐ அதிகாரிகள் நடத்திய ரெய்டின்போது கைப்பற்றிய ஆவணங்கள் அடிப்படையில் அவர்களுடைய பெயர்களையும் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறுகிறார்கள் சி.பி.ஐ-யுடன் தொடர்புடையவர்கள். மேலும், வருமான வரித்துறை உறுதி செய்த தகவல் மற்றும் மாதவராவ் கூறிய தகவல்கள் என மூன்று பேருக்கும் எதிரான ஆதாரங்கள் வலுவாக இருப்பதால், விரைவில் அவர்கள் மூன்று பேருக்கும் சம்மன் அனுப்பப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து, அவர்களை டெல்லிக்கு அழைத்து விசாரணை நடத்தவும் வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கும் சி.பி.ஐ அதிகாரிகள், அவர்கள் அளிக்கும் பதிலைத் தொடர்ந்து சிறைக்கு அனுப்பவும் வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

Original Article

Previous ``வீட்டில் ஒருவரை இழந்துவிட்டோம்!" - `மக்கள் டாக்டர்' மறைவுக்காகக் கலங்கும் கோவை
Next இறுகும் சி.பி.ஐ பிடி... திரிசங்கு நிலையில் எடப்பாடி பழனிசாமி... தப்பிக்கிறாரா விஜயபாஸ்கர்?

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *