கர்நாடகாவில் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்வதில் அரசு உறுதியாக இருக்கிறது. எனவே, விவசாயிகள் இன்னும் 15 நாட்களுக்கு அமைதி காக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
கர்நாடக முதல்வர் குமாரசாமி, துணை முதல்வர் பரமேஷ்வர் ஆகியோர் நேற்று பெங்களூருவில் அம்மாநில விவசாய சங்கப் பிரதிநிதிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினர். குமாரசாமியின் இல்லத்தில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கர்நாடக மாநில விவசாயிகள் சங்கத் தலைவர் கோடிஹள்ளி சந்திரசேகர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். சுமார் 3 மணிநேரம் நடந்த இந்தக் கூட்டத்தில், விவசாய அமைப்பினர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இந்தக் கூட்டத்துக்குப் பின்னர், செய்தியாளர்களிடம் முதல்வர் குமாரசாமி கூறியதாவது:
கர்நாடக முதல்வராக பதவியேற்றதும், விவசாயக் கடன்களை முதலில் தள்ளுபடி செய்வேன் என்று தேர்தல் பிரச்சாரத்தின் போது அறிவித்திருந்தேன். ஆனால் எனக்கு தனி பெரும்பான்மை கிடைக்காததால், தன்னிச்சையாக அந்த முடிவை எடுக்க முடியவில்லை. இருப்பினும், விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வதில் அரசு உறுதியாக இருக்கிறது. எனவே விவசாயிகள் இன்னும் 15 நாட்கள் பொறுமை காக்க வேண்டும்.
இதுதொடர்பாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நானும், துணை முதல்வர் பரமேஸ்வரும் விரைவில் சந்தித்து பேசவுள்ளோம். அமைச்சரவை பதவியேற்புக்கு பின்னர், விவசாயக் கடன் தள்ளுபடி குறித்து உறுதியான முடிவு எடுக்கப்படும். விவசாயக் கடன் தள்ளுபடி செய்வதில் இருந்து பின்வாங்க மாட்டேன். இவ்வாறு குமாரசாமி தெரிவித்தார்.
No Comment