கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் தீவிர காய்ச்சலால் 9 பேர் பலியாகினர். அவர்களில் 2 பேருக்கு நிபா வைரஸ் தாக்கியிருந்தது கண்டறியப்பட்டது. இதனை சுகாதார துறை உறுதி செய்துள்ளது. இதனை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளன.
கோழிக்கோடு மாவட்ட ஆட்சியர் ஜோஸ் தலைமையில் இதனை தடுக்க பணி குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிபா வைரஸ் கடந்த 1998ம் ஆண்டு முதன்முறையாக மலேசியாவில் கண்டறியப்பட்டது. அங்குள்ள மரங்களில் வாழ்ந்து வந்த பழங்களை தின்னும் ஒரு வகை வவ்வால்களால் இந்த வைரஸ் ஏற்பட்டது தெரிய வந்தது. இந்த வவ்வால் கடித்த பழங்களை உண்பது வைரஸ் பரவுவதற்கு காரணம் என கூறப்படுகிறது.
இதனால் தலைவலி, மூச்சு விடுவதில் சிரமம், மயக்கம் ஆகிய பாதிப்புகள் ஏற்படுகின்றன. கேரளாவின் கோழிக்கோடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் வைரஸ் பாதிப்புகள் காணப்படுகின்றன. 25 பேர் வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தில் நோய் பாதிப்பு இல்லை என சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நோய் பரவாமல் தடுப்பதற்காக கேரளாவை ஒட்டிய பகுதிகளில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன என்றும் அவர் கூறிள்ளார்.
No Comment