இணைய நிறுவனங்கள் உங்களை கண்காணிப்பதை தடுக்க 5 வழிகள்


சுமார் 50 லட்சம் ஃபேஸ்புக் பயனாளிகளின், அனுமதி இல்லாமல் அவர்களின் தகவல்களை திருடி அமெரிக்க அதிபர் தேர்தலில் தாக்கம் செலுத்த கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனம் முயற்சி செய்த விவகாரம் இணையத்தில் பகிரப்படும் தனிநபர் தகவல்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

ஃபேஸ்புக் மற்றும் கூகுள் ஆகிய நிறுவனங்கள் உங்கள் தகவல்களை சேமிப்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், எந்த அளவு சேமிக்கின்றன என்று தெரியுமா?

இணையத்தில் இருக்கும் நமது தரவுகளை பாதுகாப்பது எப்படி என்றும் பயனற்ற தரவுகளை எவ்வாறு நீக்குவது என்பது பற்றியும் ஜெர்மனியில் உள்ள டேக்டிகல் டேட்டா எனும் லாப நோக்கமற்ற இணையப் பாதுகாப்பு நிறுவனம் ஒன்றிடம் பேசினோம்.

1. ஃபேஸ்புக் கணக்கை சுத்தம் செய்யுங்கள்:

நீங்கள் பதிவேற்றிய தகவல்கள் அனைத்தையும் தரவிறக்கம் செய்ய ஃபேஸ்புக் அனுமதிக்கிறது.

உங்கள் கணக்கின் General Account Settingsஇல் சென்று ‘Download a copy of your Facebook data’ என்ற தேர்வை நீங்கள் தெரிவு செய்தால், உங்கள் படங்கள், செய்திகள் என அனைத்தும் நீங்கள் பதிவு செய்துள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்.

‘Apps’ எனும் தேர்வுக்கு சென்று நீங்கள் தேவையில்லாமல் உங்கள் ஃபேஸ்புக் கணக்கு விவரங்களை சேகரிக்க அனுமதி கோரும் செயலிகளை அழித்துவிடலாம். அவற்றை அழிக்கும் முன்பு அவை உங்களைப் பற்றிய தகவல்கள் எவ்வளவு சேமித்துள்ளன என்பதை ஆராய்ந்தால் நீங்கள் அதிர்ச்சி அடைவீர்கள்.

2.கூகுள் உங்களைப் பற்றி அறிந்துள்ள தகவல்கள்!!

நீங்கள் எப்படியும் குறைந்தது ஒரு கூகுள் செயலியையாவது தினமும் பயன்படுத்துவீர்கள். வேறு யாரையும்விட கூகுள் உங்களைப்பற்றி அதிகமாக அறிந்திருக்கும்.

உங்கள் கூகுள் கணக்கில் நுழைந்து, உங்கள் கணக்கின் படத்தின் மீது கிளிக் செய்தால் ‘Privacy’ என்பதை தெரிவு செய்து, அதைத் தொடர்ந்து வரும் பக்கத்தில் ‘Transparency and choice’ பகுதியில் கூகுள் செயலிகள் மற்றும் சேவைகளுக்கு எந்தத் தரவுகளை பகிரலாம் என்பதை நீங்களே கட்டுப்படுத்த முடியும்.

google.com/takeout என்ற முகவரியில் கூகுள் உங்களைப் பற்றி சேகரித்துள்ள தகவல்கள் அனைத்தையும் தெரிந்துகொள்ளலாம்.

3.நீங்கள் எங்கு சென்றாலும் கண்டுபிடிக்க முடியும்!!!!

நீங்கள் திறன்பேசி பயன்படுத்துவபவராக இருந்தால், நீங்கள் இருக்கும் இடம் மற்றும் செல்லும் இடங்களை அறிய செயலிகளுக்கு அனுமதி வழங்கி இருப்பீர்கள்.

நீங்கள் ஆன்ராய்டு திறன்பேசி பயன்படுத்துபவராக இருந்தால்

Google Maps > menu > Your timeline தேர்வில் நீங்கள் சென்ற இடங்கள் சேமிக்கப்பட்டிருப்பதை அறியலாம்.

ஐ-ஃபோன் பயனாளிகள் iPhone: Settings > Privacy > Location Services என்ற தேர்வில் அதை அறியலாம்.

ஆன்ராய்டு திறன்பேசிகளில் Android: Settings > Apps > App permissions > Location என்ற முகவரியிலும் ஐ-ஃபோன்களில் iPhone: Settings > Privacy > Location Services என்ற முகவரியில் அந்த தரவுகளை நீங்கள் அழிக்க முடியும்.

4.நீங்கள் இணையத்தில் தேடுவதை அழிப்பது எப்படி?

நீங்கள் ஏதாவது பொருளை வாங்குவதற்காக இணையத்தில் தேடினால், நீங்கள் செல்லும் பிற இணையதள பக்கங்களுக்கு அவற்றைப் பற்றிய விளம்பரங்களே வருகின்றனவா?

நீங்கள் தேடும் தேடல் சொற்கள், நீங்கள் சென்ற இணையதளங்கள், உங்கள் கருவியின் ஐ.பி முகவரி ஆகிய அனைத்தும் இணையதள செயலி மற்றும் சேவைகளை வழங்கும் நிறுவனங்களால் சேமிக்கப்படும்.

எல்லா இணையதள பிரௌசரும் (உலாவி) உங்கள் தரவுகளை குக்கீஸ் எனும் தற்காலிக கோப்புகள், தேடல் வரலாறு ஆகியவற்றை சேமிக்கும் வகையிலேயே உருவாக்கப்பட்டுள்ளன.

New Private Window அல்லது Incognito Window எனும் தேர்வை தெரிவு செய்து இணையத்தை பயன்படுத்துவதன் மூலம் உங்கள் இணையதள நடமாட்டங்களை நிறுவனங்கள் தங்கள் செயலிகள் மற்றும் உலாவிகள் சேமித்து வைப்பதை உங்களால் தடுக்க முடியும்.

உலாவிகள் மற்றும் செயலிகளில் Privacy> Do not track என்று தேர்வின் மூலம் எப்போதும் உங்கள் தரவுகளை நிறுவனங்கள் பின்தொடராமல் இருக்கும் வசதியை உண்டாக்க முடியும்.

5. உங்களை நீங்களே கேட்க வேண்டிய கேள்விகள்?

உங்கள் செல்பேசியில் எத்தனை செயலிகள் உள்ளன? அந்த செயலிகள் குறித்து கீழ்க்கண்ட கேள்விகளை உங்களை நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டும்.

  • அது உங்களுக்கு மிகவும் அவசியமா?
  • கடைசியாக அந்த செயலியை நீங்கள் பயன்படுத்தியது எப்போது?
  • அது உங்களை பற்றி எந்தெந்த தகவல்களை சேமிக்கிறது?
  • அந்த செயலியை உருவாக்கியது யார்?
  • அவர்கள் நம்பகமானவர்களா?
  • அந்த செயலியின் அந்தரங்க கொள்கை (privacy policy) என்ன?
Previous வாராக்கடன்: 17,000 கோடி ரூபாய் சொத்துகளை பறிமுதல் செய்ய முடிவு
Next எண்ணெய் கசிவை உண்ணும் அரிய வகை 'ஜெய' பாக்டீரியா!

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *