”2075-இல் ஆப்பிள், முகநூல் மற்றும் கூகுள் உலகை ஆளும்”- ஆப்பிள் நிறுவன இணை நிறுவனர் பேச்சு..!


ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனரான ’ஸ்டீவ் வோஸ்நியாக்’, வரும் 2075-ஆம் ஆண்டு வரையிலும் ஆப்பிள், முகநூல் மற்றும் பேஸ்புக் ஆகிய நிறுவனங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் எனவும், அந்த காலகட்டத்தில் இந்த மூன்று நிறுவனங்களும் உலகை ஆளும் எனவும் தெரிவித்துள்ளார். ஆப்பிள் நிறுவனம் ஐ.பி.எம் நிறுவனம் போல நீண்ட காலத்திற்கு தனது சேவையை அளிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவில் நடைபெற்ற சிலிகான் வேலி கருத்தரங்கில் பேசிய அவர், இந்த கருத்தை தெரிவித்துள்ளார். ”கடந்தாண்டின் இறுதி காலாண்டில் ஆப்பிள் நிறுவனத்தின் மதிப்பு 246.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இதனைக் கொண்டு ஆப்பிள் நிறுவனம், எந்த தொழிலில் வேண்டுமானாலும் முதலீடு செய்ய முடியும். இந்த வெற்றி 2075-ஆம் ஆண்டுக்கு பிறகும் தொடரும். ஆப்பிளைப் போல முகநூல் மற்றும் கூகுள் நிறுவனங்களும், இதே போல சக்தி வாய்ந்த நிறுவனங்களாக உலகில் விளங்கும்.” என வோஸ்நியாக் தெரிவித்துள்ளார்.

எதிர்காலம் குறித்த சரியான கணிப்பை வெளியிடுபவர்களாக கருதப்படும் நபர்களில் வோஸ்நியாக்கும் ஒருவர். 1982-ஆம் ஆண்டு, கையில் எடுத்துச் செல்லக்கூடிய கணினிகளை எதிர்காலத்தில் பெரிய அளவில் மக்கள் பயன்படுத்துவார்கள் என தெரிவித்திருந்தார், அதே போலவே தற்போது மின்னணு சாதனங்களில் லேப்டாப் முக்கிய இடம் பிடித்திருக்கிறது. மேலும் 2075 -ஆம் ஆண்டில், புதிய நகரங்களை உருவாக்க, பாலைவனங்கள் தேர்ந்தெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

”2075-ஆம் ஆண்டுகளில் மக்கள் வாழ வீடுகள் இல்லை என்ற பிரச்சனை இருக்காது. மிகப்பெரிய கூரை போன்ற கட்டட அமைப்பின் கீழ் மக்கள் வாழ்வார்கள். அவர்கள் வீட்டை விட்டு வெளியில் செல்ல, பிரத்யேக உடைகளும் அப்போது தயாரிக்கப்பட்டிருக்கும். மேலும் ஏ.ஐ எனப்படும் இயந்திர கற்றல் தொழில்நுட்பம் மூலம், மக்கள் மின்னணு சுவர்களிடம் பேசுவார்கள். தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை பெறவும், இயந்திர கற்றல் தொழில்நுட்பம் அவர்களுக்கு பக்க பலமாக இருக்கும். மருத்துவ கருவிகளே மனிதர்களுக்கு இருக்ககூடிய நோய்களை கண்டறிந்து, அவற்றுக்கான மருந்துகளையும் பரிந்துரைக்கும். இதன் மூலம் மருத்துவர்கள் எதிர்காலத்தில் தேவைப்பட மாட்டார்கள். எதிர்காலத்தில் பூமி குடியிருப்புகளுக்காகவும், செவ்வாய் கோள் பெரும் தொழிற்சாலைகளுக்காகவும் பயன்படுத்தப்படும்.” என வோஸ்நியாக் அந்த கருத்தரங்கில் பேசியுள்ளார்.

கடந்த 1975-ஆம் ஆண்டு ஸ்டீவ் ஜாப்ஸுடன் இணைந்து ஆப்பிள் நிறுவனத்தை துவங்கியவர் ஸ்டீவ் வோஸ்நியாக். இவர் 1976-ஆம் ஆண்டு ”ஆப்பிள் ஐ” கணினியை வடிவமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி:
http://tech.firstpost.com/news-analysis/apple-google-and-facebook-will-exist-in-2075-says-apple-co-founder-steve-wozniak-372091.html

Previous மருத்துவ வசதிகளுக்காக இந்திய அரசு அறிமுகப்படுத்தவுள்ள புதிய குறுஞ்செயலி..!
Next ஐந்து புதிய ரக திறன்பேசிகளுடன் இந்தியாவில் களமிறங்கும் டெக்னோ நிறுவனம்..!

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *