எலும்பு முறிவுக்கு மாவுக்கட்டு போடுவதும், அதை விட தீவிரமான எலும்பு முறிவுக்கு சிறிய அறுவை சிகிச்சை செய்து சிறிய உலோக போல்டுகளை எலும்புகளில் பொருத்துவதும் தற்போது வரை நடைமுறையில் இருந்து வருகிறது.
இதற்கு அடுத்தகட்டமாக எலும்பு நொறுங்கிப் போனவர்களுக்கு செயற்கை எலும்புகள் பொருத்தும் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டது. ஆனால் சரியான அளவுகளில் எலும்புகள் உருவாக்கப்படாததால், செயற்கை எலும்புகள் பொருத்தப்படும் பலர் மீண்டும் பல அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டி இருந்தது. இதன் காரணமாக பலருக்கு தீராத வலியும், நிரந்தர ஊனமும் ஏற்படும் வாய்ப்புகள் ஏற்பட்டன.
இந்நிலையில் இந்த பிரச்சனைக்கு முப்பரிமாண தொழில்நுட்பம் மூலம் தீர்வு கண்டுள்ளனர் இங்கிலாந்து மருத்துவர்கள். இதன்படி எலும்பு முறிவு ஏற்பட்ட பகுதியானது எக்ஸ்-ரே செய்வது போல பல்வேறு கோணங்களில் படம்பிடிக்கப்படுகிறது. இந்த படங்களை ஆய்வு செய்து, நோயாளிக்கு தேவையான துல்லியமான எலும்பின் அளவானது கணக்கிடப்படுகிறது. அதன் பின்னர் நோயாளியின் இடுப்பிலிருந்து எடுக்கப்படும் ஸ்டெம் செல் மூலம் அவருக்கு தேவையான எலும்பு ஆய்வகத்தில் வளர்க்கப்படுகிறது.
எலும்பு முழுவதும் வளந்த பின்னர், நோயாளிக்கு தேவையான எலும்பின் அளவானது முப்பரிமாண அச்சு இயந்திரத்தில் உள்ளீடு செய்யப்பட்டு, எலும்பு வடிவமைக்கப்படுகிறது. அதன் பின்னர் அந்த எலும்பானது நோயாளிக்கு அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்படுகிறது.
இந்த அறுவை சிகிச்சையில் பெரிய அளவில் இரத்த இழப்பு இருக்காது எனவும், வெறும் 30 நிமிடங்களில் இந்த அறுவை சிகிச்சை நிறைவடையும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த புதிய கண்டுபிடிப்பானது எட்டு நோயாளிகளிடம் சோதனை செய்யப்பட்டதாகவும், அவர்கள் அனைவரும் 90 சதவீதம் குணமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil
No Comment