நீர்நிலைகளை ஆக்கிரமித்து கல்வெட்டு?! – சர்ச்சையில் காஞ்சி தி.மு.க.


அண்ணா, கருணாநிதி ஆகியோரின் சிலைகளைத் திறந்துவைப்பதற்காக தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று காஞ்சிபுரம் வருகிறார். ஸ்டாலின் வருகைக்காக தி.மு.க-வினர் அமைத்திருக்கும் கல்வெட்டு பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை காஞ்சிபுரம் வருகிறார். வாலாஜாபாத் வடக்கு ஒன்றியம் சார்பாக சேக்கான்குளம் பகுதியிலும், காஞ்சிபுரம் ஒன்றியம் சார்பாக பெரியார் நகரிலும், காஞ்சிபுரம் நகர தி.மு.க சார்பில் ரங்கசாமி குளம் அருகிலும் அமைக்கப்பட்ட கல்வெட்டுகளை அவர் திறந்துவைக்கிறார். இதைத் தொடர்ந்து, பவளவிழா மாளிகையில் உள்ள கருணாநிதி மற்றும் அண்ணா சிலைகளைத் திறந்துவைக்கிறார். இந்த நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, இரவு 7 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.

காஞ்சிபுரம் சார்பாக அமைக்கப்பட்ட கல்வெட்டுகள், அம்மாவட்ட அரசியலில் பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியுள்ளன. மஞ்சள் நீர் கால்வாயின் கிளைக் கால்வாயில் கட்டப்பட்ட இந்தக் கல்வெட்டு, கான்கிரீட் அமைத்துக் கட்டப்பட்டுள்ளது. நீர்நிலையில் கட்டப்பட்டதால் கொதிப்படைந்த சமூக ஆர்வலர்கள், அமுதா ஐஏஎஸ்-ஸிடம் முறையிட்டனர். இதனால் அவர், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் ஆய்வு செய்யச் சொல்லி நடவடிக்கை எடுக்கச் சொன்னார்கள். மாவட்ட ஆட்சியர் பொன்னையாவும் காஞ்சிபுரம் சப்-கலெக்டர் சரவணனிடம் ஆய்வுசெய்யச் சொன்னார். பிறகு, இடத்தை ஆய்வுசெய்த சப்-கலெக்டர் சரவணன், இந்த இடம் நீர்நிலைப் புறம்போக்கு பகுதியில் உள்ளது. நகராட்சிக்குச் சொந்தமான இடம் என்பதால் நடவடிக்கை எடுக்கச் சொல்லி காஞ்சிபுரம் நகராட்சிக்கு வாய்மொழியாக உத்தரவிட்டார். அதிகாரிகளிடமிருந்து பெரிய அளவில் எந்த அழுத்தமும் இல்லாததால், கல்வெட்டு அமைக்கும் பணி தொடர்ந்துகொண்டேதான் இருந்தது.

இந்த கல்வெட்டுகளை பசையான பிரமுகர் ஒருவர்தான் கட்டிக் கொடுக்கிறார். ஸ்டாலின் திறக்கிறார் என என்பதால் நகராட்சியும் இதை கண்டுகொள்ளவில்லை. இதைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் ‘நாங்க மட்டும்தான் நீர்நிலைகளில் ஆக்கிரமித்துக் கட்டுகிறோமா? அ.தி.மு.கவினர் கட்டவில்லையா?’ என மாவட்ட ஆட்சியரிடம் தி.மு.கவினர் கொதித்தனர். இதைத் தொடர்ந்து 18-ம் தேதி அனைத்துக் கட்சியினர் கலந்து கொள்ளும் சட்டம் ஒழுங்கு கூட்டத்தை கூட்ட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். ஆனால் அந்த கூட்டம் நடைபெறாமல் தள்ளிக் கொண்டே போனது. கடைசிவரை இந்தக் கூட்டம் நடைபெறவில்லை.

“ தமிழக முதன்மைச் செயலாளர், பேரிடர் மேலாண்மை கண்காணிப்பு அதிகாரி, மாவட்ட ஆட்சியர், சார்-ஆட்சியர், நகராட்சி என அனைத்து தரப்பினருக்கும் புகார் சென்றும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. “தி.மு.க. நீர்நிலைப் புறம்போக்கில் கல்வெட்டுகளை அமைப்பதற்கு அ.தி.மு.கவும் பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தி.மு.க மாவட்ட செயலாளர் சுந்தரும், அ.தி.மு.க மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் கணேசனும் நெருக்கமாக இருப்பதால் பிரச்னை பெரிதாகாமல் தங்களுக்குள்ளேயே இதை முடித்துக் கொண்டார்கள். ஆனால் மேடைக்கு மேடை நீர்நிலை ஆக்கிரமிப்பு பற்றி பேசும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் இந்த கல்வெட்டை திறந்து வைக்கலாமா?” என காஞ்சிபுரம் நலம்விரும்பிகள் கொதிக்கிறார்கள்.

இதைப் பற்றி நம்மிடம் பேசிய காஞ்சி தி.மு.க-வினர், “ எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே இப்படியொரு புகாரைத் தெரிவிக்கின்றன. கல்வெட்டு வைத்ததில் எந்த விதிமீறலும் நடக்கவில்லை. அரசு நிர்வாகத்திடம் முறையான அனுமதியைப் பெற்றுதான் செயல்படுகிறோம்"; என்கின்றனர்.

Original Article

Previous 12 மாணவர்கள் மீது தேச துரோக வழக்கு பதிவு
Next அயனாவரம் பாலியல் குற்ற வழக்கின் தற்போதைய நிலை என்ன..? #ShockToKnow #VikatanInfographics

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *