பொன்.மாணிக்கவேலா… அபய்குமார் சிங்கா..? குழம்பும் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு


சிலைக்கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ-க்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்தும், பொன்.மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக ஒரு வருடத்துக்கு மறுநியமனம் செய்தும் உத்தரவிட்டிருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம். இந்நிலையில், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றுவதா அல்லது தமிழக அரசின் உத்தரவைப் பின்பற்றுவதா என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.

கடந்த 2014-ம் ஆண்டு முதல் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவின் ஐ.ஜி-யாகச் செயல்பட்டு வருகிறார் பொன்.மாணிக்கவேல். இந்த நிலையில், ரயில்வே ஐ.ஜி-யாக பொன்.மாணிக்கவேல் மாற்றப்பட்டார். ஆனால், சிலைகள் கடத்தல் குறித்து வழக்குகளை விசாரித்துவரும் நீதிமன்றம், பொன்.மாணிக்கவேலுவை சிலைகள் தடுப்புப் பிரிவுக்கு நியமித்து, வழக்கு விசாரணையை அவரிடமே கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. தமிழகக் கோயில்களிலிருந்து திருடப்பட்ட பல சிலைகளை மீட்டுக்கொண்டுவந்தது இவரது தலைமையிலான பிரிவு. இதில் குறிப்பிடத்தக்கது தஞ்சைப் பெரிய கோயிலிலிருந்து காணாமல் போன ராஜராஜன் மற்றும் உலகமாதேவி சிலைகள். குஜராத் அருங்காட்சியகத்தில் இருந்த சிலைகளை நீதிமன்ற உத்தரவோடு மீட்டுக்கொண்டுவந்தார். இந்தச் சிலைகள் தஞ்சை வந்தடைந்தபோது, ஒரு திருவிழாவாகவே கொண்டாடப்பட்டது. (குஜராத்திலிருந்து மீட்டுவரப்பட்ட சிலைகள் உண்மையில் தஞ்சை கோயிலின் ராஜராஜன் சிலைகள் கிடையாது என்றும், அது தங்களுடையதுதான், அதற்கான சான்றுகள் இருப்பதாகக் கூறி குஜராத் விக்ரம் சாராபாய் அறக்கட்டளை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது).

இந்நிலையில், நவம்பர் 30-ம் தேதி பொன்.மாணிக்கவேல் ஓய்வு பெறவிருந்தார். அப்போது, “சிலைக் கடத்தல் வழக்குகளை சி.பி.ஐக்கு மாற்றத் தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது உயர் நீதிமன்றம். அதேநேரத்தில், வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் நீதிமன்றத்தில் கோரிக்கை மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், சிறப்பாகச் செயல்பட்டுவரும் பொன்.மாணிக்கவேலை பணிநீட்டிப்பு செய்ய வேண்டும் என்று அதில் தெரிவித்திருந்தார். இந்த மனுவின் அடிப்படையில், ஓய்வு பெறவிருந்த பொன்.மாணிக்கவேலை சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு சிறப்பு அதிகாரியாக நியமித்து உத்தரவிட்டது நீதிமன்றம். அதையடுத்து, பொன்.மாணிக்கவேல் கும்பகோணத்தில் உள்ள சிலைக் கடத்தல் பிரிவு அலுவலகத்தில் தன்னுடைய வேலையைத் தொடங்கியிருக்கிறார்.

பொன்.மாணிக்கவேலை உயர் நீதிமன்றம் சிறப்பு அதிகாரியாக நியமித்த சில மணி நேரங்களில், கரூர் காகிதத் தொழிற்சாலை கண்காணிப்புப் பிரிவு ஏ.டி.ஜி.பி-யாக இருந்த அபய்குமார் சிங், சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு ஏ.டி.ஜி.பி-யாக நியமித்து உத்தரவிட்டது தமிழக அரசு.

இந்நிலையில், சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவில், பொன்.மாணிக்கவேலோடு இதுவரை வேலை பார்த்து வந்த அதிகாரிகள், இனியும் அவரோடு தொடர்வார்கள் என்று நீதிமன்றம் கூறியிருக்கிறது. தற்போது, சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு தமிழக அரசு, தனி அதிகாரி ஒருவரை நியமித்துள்ளதால், அந்தப் பிரிவில் உள்ள முப்பதுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் இனி யாருடன் பணிபுரிய வேண்டும் என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.

அதுபற்றி அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் தற்போது தஞ்சாவூர் மாவட்ட அலுவலகத்தில் இருக்கிறார். நீதிமன்ற உத்தரவையடுத்து, நாங்கள் பொன்.மாணிக்கவேலுடன் வேலை செய்வதா, இல்லை தமிழக அரசு நியமித்த ஏ.டி.ஜி.பி. அபய்குமார் சிங்குடன் பணிபுரிவதா என்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறோம். தமிழக அரசு விரைவில், இதற்கான உத்தரவை வெளியிட வேண்டும். இல்லையென்றால் அனைத்து வேலைகளும் பாதிக்கப்படும். அரசு உத்தரவிடாமல், எங்களால் யாருடனும் சென்று வேலை செய்ய முடியாது. தமிழக அரசு சொல்வதைத்தான் நாங்கள் கேட்க வேண்டும். குறைந்த அளவில்தான் இந்தத் துறையில் பணியாளர்கள் இருக்கிறார்கள். இதையும் இரண்டாகப் பிரித்தால், சரியாக வருமா என்று தெரியவில்லை. ஏ.டி.ஜி.பி. அபய்குமார் சிங்கும் பதவியேற்றுக்கொண்டார். நாங்கள் இருக்கும் அதே அலுவலகத்தில்தான் அவரும் இருக்கிறார். அவரும் தமிழக அரசின் உத்தரவுக்காகத்தான் காத்திருக்கிறார்'' என்றார்.

இதையடுத்து அபய்குமார் சிங்கை தொடர்புகொண்டு பேச முயன்றோம், “எது குறித்தும் என்னால் இப்போது பேச முடியாது"; என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார். பொன்.மாணிக்கவேல் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டதை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றம் செல்ல வாய்ப்பிருக்கிறது. அதன் பிறகுதான் இதில் அரசு முடிவெடுக்கும் என்று தெரிகிறது.

யாருக்குக் கீழ் வேலை செய்வது என்று தெரியாமல், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள்தாம் தற்போது பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். விழிபிதுங்கிச் செய்வதறியாது தவிக்கும் அதிகாரிகளின் பிரச்னைக்கு அரசு விரைவில் தீர்வு காண வேண்டும்.

Original Article

Previous "காபி கலகம்!" சுந்தர் பிச்சைக்கு எதிராகக் கொந்தளிக்கும் கூகுள் ஊழியர்கள்
Next திருத்தம்... திரிபு வேலை... ஜிடிபி வளர்ச்சி... அடேங்கப்பா மோடி!

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *