மொபைல் நிறுவனங்கள் மற்றும் வங்கிகளிடம் இருக்கும் ஆதார் எண்கள் இனி என்னாகும்?


கடந்த வாரம் புதன்கிழமை அன்று உச்சநீதிமன்றம் அளித்த ஆதார் தொடர்பான தீர்ப்பு பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது. அதில் முக்கியமானது இதுவரைக்கும் நாம் மொபைல் நிறுவனங்கள், இ-வாலட்கள் மற்றும் வங்கிகளிடம் கொடுத்த ஆதார் தகவல்கள் என்னாகும் என்பது. இன்னும் சிலர், தற்போது உச்சநீதிமன்றம் மொபைல் நிறுவனங்களிடம் ஆதார் கேட்கக்கூடாது எனச் சொல்லியிருப்பதால் அவை நம்முடைய தகவல்களை அழித்துவிடுமா என்றும் கேள்வி எழுப்புகின்றனர். தீர்ப்பின்படி அது சாத்தியமா?

தீர்ப்பு சொன்னது என்ன?

ஆதார் என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி சரியானதா, அது மக்களின் தனியுரிமைக் கொள்கைகளை மீறுகிறதா, மொபைல் நிறுவனம் மற்றும் வருமான வரித்துறை போன்றவை ஆதார் கட்டாயம் எனச் சொல்வது சரியா எனப் பல்வேறு கேள்விகளை உள்ளடக்கியதுதான் ஆதார் வழக்கு. அவை அனைத்தையும் ஆய்வுசெய்து இறுதித் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளில் நான்குபேர் ஆதார் சட்டப்படி சரியே எனத் தீர்ப்பளித்தனர். நீதிபதி சந்திரசூட் மட்டும், “ஆதார் மற்றும் அதன் செயல்பாடுகள் அனைத்துமே அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது; இது சட்டத்தை ஏமாற்றும் செயல்"; எனத் தீர்ப்பெழுதினார். ஆனால், நான்கு நீதிபதிகளின் தீர்ப்பே பெரும்பான்மையானது என்பதால், சந்திரசூட்டின் தீர்ப்பு ஏற்றுக்கொள்ளப்படாது.

ஆதாருக்கு சாதகமாகத் தீர்ப்பளித்த மற்ற நான்கு நீதிபதிகளுமேகூட, ஆதார் சட்டத்தில் நிறைய பிரிவுகளை சட்டத்துக்குப் புறம்பானதாக அறிவித்தனர். அவற்றைச் செல்லாது என அறிவித்தனர். அதில் ஒன்றுதான் பிரிவு 57. ஆதார் சட்டத்தின் இந்தப் பிரிவின்படி சட்டத்துக்குட்பட்ட எந்தவொரு அரசு, தனியார் அமைப்பு அல்லது தனிநபரும் குடிமகன் ஒருவரின் ஆதார் தகவல்களை, அவரை அடையாளம் கண்டுகொள்ளப் பயன்படுத்தமுடியும். சுருக்கமாகச் சொன்னால் எந்தவொரு தனியார் நிறுவனமும், நம்முடைய ஆதார் தகவல்களைக் கேட்கமுடியும். இந்தப் பிரிவைத்தான் தற்போது செல்லாது என அறிவித்திருக்கிறது உச்சநீதிமன்றம். மேலும், கடந்த ஆண்டு மார்ச் 23-ம் தேதி “எல்லா மொபைல் நிறுவனங்களும் தங்களின் வாடிக்கையாளரின் எண்களையும் ஆதார் எண்களோடு இணைக்க வேண்டும்"; என்ற அரசின் அறிவிப்பையும் செல்லாது என அறிவித்திருக்கிறது. இதற்கு நீதிமன்றம் சொல்லும் காரணம், “இப்படி தனியார் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து ஆதார் தகவல்களைப் பெறுவதற்கு எவ்வித சட்டஅனுமதியும் இல்லை"; என்பதே. எனவே வங்கிகள், மொபைல் நிறுவனங்கள் போன்றவை வாடிக்கையாளர்களிடம் ஆதார் எண்களைக் கேட்கக் கூடாது எனவும் தெரிவித்துள்ளது. பிரிவு 57 விஷயத்தில் உச்சநீதிமன்றம் சுருக்கமாகச் சொன்னது இவ்வளவுதான். எனவே, இதுவரைக்கும் மொபைல் நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் இ-வாலட் நிறுவனங்களிடம் நாம் கொடுத்திருக்கும் ஆதார் எண்களை நம் கணக்குகளில் இருந்து நீக்கச்சொல்வதற்கு நமக்கு உரிமை உண்டு. ஆனால், அவை தானாக முன்வந்து நீக்குமா என்றால் பதில் இல்லைதான்.

ஆதார் தொடர்பாக 5 நீதிபதிகள் வழங்கிய மூன்று தீர்ப்புகளில் நீதிபதி சந்திரசூட் மட்டுமே, “தனியார் நிறுவனங்கள் பயனாளர்களின் ஆதார் தகவல்களை வாங்குவது என்பது அவர்களின் தனியுரிமையை மீறும் செயல். எனவே, அவற்றை நிறுத்த வேண்டும். மொபைல் நிறுவனங்கள் இதுவரைக்கும் சேமித்திருக்கும் ஆதார் தகவல்களை உடனடியாக அழித்துவிட வேண்டும்"; எனத் தெரிவித்திருக்கிறார். மற்ற நீதிபதிகளின் தீர்ப்பில், இனிமேல் தனியார் நிறுவனங்கள் ஆதார் தகவல்களைக் கேட்கக் கூடாது என்றுதான் இருக்கிறதே தவிர, இதுவரைக்கும் சேகரித்த ஆதார் தகவல்கள் அனைத்தையும் அழிக்க வேண்டும் என உத்தரவு இல்லை. எனவே, இந்த விஷயத்தில் தெளிவின்மையே இருக்கிறது.

e-KYC அவ்வளவுதானா?

சில ஆண்டுகளுக்கு முன்னர் வரைக்கும் ஒரு சிம் கார்டு வாங்கினால், அது ஆக்டிவேட் ஆனபின் கஸ்டமர் கேரில் இருந்து போன் செய்து, அதைப் பயன்படுத்துவது நாம்தானா, சிம் வாங்குவதற்காக நாம் கொடுத்திருக்கும் ஆவணங்கள் அனைத்தும் சரிதானா என்றெல்லாம் சோதிப்பார்கள். ஆனால், ஆதார் KYC வந்ததற்குப் பின்னர் இதற்கெல்லாம் தேவையே இல்லாமல் போய்விட்டது. நம்முடைய ஆதார் எண் கொடுத்து, நம் விரல்ரேகையை ஏஜென்ட்டிடம் கொடுத்தாலே, நாம் கொடுத்திருக்கும் விவரங்கள் அனைத்தும் ஆதார் தகவல்களோடு ஒப்பிடப்பட்டுச் சரி எனத் தெரிந்துவிடும். எனவே, போலி ஆவணங்களைக் கொடுத்தோ, போலி நபர்களோ சிம் கார்டுகளை வாங்கமுடியாது. இதனால்தான் புதிதாக சிம் வாங்குபவர்களிடமும், ஏற்கெனவே சிம் கார்டு வைத்திருப்பவர்களிடமும் ஆதார் எண்ணை வாங்கச் சொன்னது அரசு. இந்த ஆதார் e-KYC முறையானது மொபைல் நிறுவனங்கள் மட்டுமின்றி, வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள், இ-வாலட்கள் எனப் பல்வேறு நிறுவனங்களுக்கும் சாதகமாக இருந்தது. காரணம், வாடிக்கையாளர்களை உறுதிப்படுத்துவது மிகச் சுலபமாக இருந்தது. ஜியோ நிறுவனம் மிக வேகமாக வாடிக்கையாளர்களை உள்ளே இழுத்துக்கொள்ள இந்த e-KYC கூட ஒருவகையில் உதவியாக இருந்தது. ஆனால், தற்போது இந்த எல்லா விஷயத்துக்கும் செக் வைத்திருக்கிறது உச்சநீதிமன்றம். இனி எந்த நிறுவனங்களும் இந்த ஆதார் KYC முறையைப் பயன்படுத்த முடியாது. அப்படியெனில், இனி மீண்டும் பழைய பேப்பர் ஜெராக்ஸ் ஆவணங்கள்தான் பயன்படுமா? இல்லவே இல்லை.

உச்சநீதிமன்றம் சொல்லியிருப்பது என்ன? இப்படி தனியார் நிறுவனங்கள் ஆதார் தகவல்களைப் பயன்படுத்துவதற்கு எவ்வித சட்டப்பாதுகாப்பும் இல்லை. அவ்வளவுதானே? பாதுகாப்பு கொடுத்துவிட்டால் போகிறது. அரசு இதற்கான உரிய சட்டத்திருத்தங்களை நிறைவேற்றினாலே போதும். வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலேயே இது நடக்கலாம். பின்னர் மீண்டும் e-KYC முறை வழக்கத்துக்கு வந்துவிடும். மத்திய நிதியமைச்சகம், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் இரண்டும் முடிவெடுத்தால் போதும். சட்டம் நிறைவேறிய பின்னர் வேண்டுமானால், மீண்டும் நீதிமன்ற ஆய்வுக்கு உட்படுத்தப்படலாம்.

சமீபத்தில் ஊடகங்களிடம் பேசிய நிதியமைச்சர் அருண்ஜெட்லி கூட இதை உறுதி செய்திருக்கிறார். “ஆதார் சட்டத்தில் சில அம்சங்களை மட்டும், உச்சநீதிமன்றம் செல்லாது என அறிவித்திருக்கிறது. இதில் எதையெல்லாம் முழுமையாகத் தடை செய்துள்ளது, எதற்கெல்லாம் சட்டப்பாதுகாப்பு தேவைப்படுகிறது என்பதையெல்லாம் அலசி ஆராய வேண்டும். பின்னர் தேவையான சட்டத்திருத்தங்களை மேற்கொள்வதன்மூலம் நீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ள குறைகளைச் சரிசெய்துவிடலாம்"; எனத் தெரிவித்திருக்கிறார். எனவே இப்போதைக்கு அரசுக்குப் பிரச்னையில்லை. ஆனால், தனியார் நிறுவனங்களுக்கு இருக்கும் சிக்கல் என்னவென்றால் புதிய சட்டங்கள் வரும்வரை வாடிக்கையாளர்களிடம் ஆதார் எண்ணைக் கேட்க முடியாது.

எப்படி நம் ஆதார் எண் இணைப்புகளை நீக்குவது?

இதுவரைக்கும் சேமித்துள்ள வாடிக்கையாளர்களின் ஆதார் தகவல்களை என்ன செய்ய வேண்டும் என்பதற்கு மொபைல் நிறுவனங்களுக்குத் தொலைத்தொடர்பு அமைச்சகமும், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கியும்தான் உரிய விதிமுறைகளை அளிக்க வேண்டும். இப்போதைக்கு மொபைல் நிறுவனங்களிடம் நம்முடைய ஆதார் எண்களை நீக்கச் சொன்னால், அவர்களும் இதையேதான் கூறுகிறார்கள்.

வங்கிகளுடன் இணைக்கப்பட்டிருக்கும் ஆதார் எண்களை எப்படி நீக்குவது என்பது பற்றி இதுவரைக்கும் முறையான அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. எனவே, இதுதொடர்பாக விண்ணப்பம் எழுதி வங்கியிடம் நேரடியாகச் சென்று முறையிடுவது வேண்டுமானால் பலனளிக்கலாம். பே டி எம் போன்ற இ-வாலட் சேவைகள் என்றால், அதன் வாடிக்கையாளர் சேவைப் பிரிவுக்குப் புகார் செய்து நீக்கமுடியும்.

ஆக மொத்தத்தில், இதுவரைக்கும் நிறுவனங்கள் சேமித்திருக்கும் ஆதார் தகவல்கள் என்ன ஆகும், தனியார் மற்றும் வங்கி சேவைகளோடு இணைந்திருக்கும் ஆதார் எண்களை எப்படி நீக்குவது ஆகிய இரண்டு கேள்விகளுக்கும் இப்போதைக்கு அரசிடம் மட்டும்தான் பதில் இருக்கிறது.

Original Article

Previous சபரிமலை பிரச்னை: கேரள அரசு 'பல்டி'
Next டிரம்ப் உடன் சுந்தர் பிச்சை சந்திப்பு

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *