அம்பேத்கருடன் லண்டன் பயணம்.. உதயசூரியன் சின்னம்.. காந்திக்குத் தமிழ் கையெழுத்து! இரட்டைமலை சினிவாசனின் பெருமைகள்


வரலாற்று நிகழ்வுகளைப் பதிவு செய்வது எவ்வளவு முக்கியமானதாக இருக்கிறதோ, அதைப் போலவே, அதற்கு ஆற்றப்படும் எதிர்வினைகளையும், எதிர்ப்பு அரசியலையும் பதிவு செய்வது இன்றியமையாததாகிறது. நிகழ்வுகளையும், அதற்கான எதிர்வினைகளையும் பதிவு செய்வதில், ஒரு தனி நபரின் வாழ்வியல் நிகழ்வுகளும், சமூகப் பொருளாதாரப் பின்னணியும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. எடுத்துக்காட்டாக, 1857ம் ஆண்டு நடந்த நிகழ்வினை முதல் `இந்திய சுதந்திரப் போர்' என்று இந்திய வரலாற்றாசிரியர் கூறுவாரானால், மேற்கத்திய வரலாற்றாசிரியர்கள் அதைச் சிறிய அளவிலான `சிப்பாய்க் கலகம்' என்று கூறி வேறு விதமான உருவம் கொடுப்பார்கள். அதைப் போலவே, இந்தியாவின் சாதிய அடுக்கினையும், அதனால் இந்தச் சமூகத்தில் ஏற்படும் தாக்கங்களையும், மாற்றங்களையும், ஓர் உயர் சமூகத்தினைச் சேர்ந்தவர் பதிவு செய்வதற்கும், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் பதிவு செய்வதற்கும், இந்தச் சாதிய அமைப்புக்குத் துளியும் தொடர்பில்லாத வேறொருவர் பதிவு செய்வதற்கும் வித்தியாசம் உண்டு.

அவ்வகையில், எழுத்தறிவு கொஞ்சம் கொஞ்சமாகப் பரவலாக்கம் செய்யப்படும்போது, வாழ்வு குறித்த பதிவுகளும், எதிர்ப்பும், முக்கிய அடையாளங்களையும் தாங்கி வரும் எழுத்துகளில் அக்காலகட்டத்தில் முதன்மையானதாக இருந்தது திரு. இரட்டைமலை சீனிவாசன் அவர்களால் 1893 ம் ஆண்டு தொடங்கப்பட்ட `பறையன்’ இதழ். அது தன்னுடைய பெயர் மூலமாகவே பல விஷயங்களைப் பதிவு செய்தது. சாதிரீதியான பாகுபாடுகளையும், கொடுமைகளையும் எதிர்த்துப் பதிவு செய்வதற்கும், அரசுக்கு மக்கள் சார்பாக அளிக்க வேண்டிய கோரிக்கைகளையும் அந்த இதழ் முன்னோக்கிக் கொண்டு சென்றது.

1859 ஜுலை 7ம் தேதி, மதுராந்தகம் பகுதியில் உள்ள கோழியாளம் கிராமத்தில் பிறந்தவர் இரட்டைமலை சீனிவாசன். அங்கிருந்து தஞ்சைக்கும், பிறகு கோவைக்கும் இவரது குடும்பம் புலம் பெயர்ந்தது. தான் படித்த பள்ளியில் உள்ள 400 மாணவர்களில் இவரையும் சேர்த்து வெறும் பத்துப் பேர் மட்டுமே ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். அதனால், பள்ளிப்பருவத்திலேயே இவர் சாதிக்கொடுமைகளுக்கு ஆளானார். ஆனால், சமூகத்தில் நிலவிய இந்தப் பாகுபாடுகளைப் போக்க கல்விதான் முக்கிய ஆயுதம் என்றுணர்ந்த அவர், எவ்வித தடைக்கும் இடம் அளிக்காமல் பள்ளிக் கல்வியை முடித்தார்.

1891ம் ஆண்டு அயோத்திதாச பண்டிதருடன் இணைந்து `பறையர் மகாசன சபை'யைத் தோற்றுவித்தார். 1894 பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு இவர் எழுதிய விரிவான மனுவில் தாழ்த்தப்பட்ட மக்கள் படும் துன்பங்களை எடுத்துரைத்த காரணமாக, பின்னாளில் `தொழிலாளர் நல ஆணையம்' தொடங்கப்பட்டது. 1901 ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்குப் பயணமான சீனிவாசன், 20 ஆண்டுகள் கழித்து நாடு திரும்பினார். 1906ம் ஆண்டு இவருக்கு அங்கு காந்தியடிகளுடன் அறிமுகம் ஏற்பட்டது. காந்தியடிகளுக்குத் தமிழில் கையெழுத்திடக் கற்றுக்கொடுத்தவரும் இவர்தான் என்பது சுவாரஸ்யமான தகவல்களுள் ஒன்று. தாயகம் திரும்பிய பிறகு, நியமனம் மூலமாகச் சட்டசபை உறுப்பினராக ஆக்கப்பட்டார் சீனிவாசன். 1923 முதல் 1939 வரை பதினாறு ஆண்டுகள் சட்டசபை உறுப்பினராகப் பணியாற்றினார் அவர். பொதுவெளி என்பதும், அதில் `பங்கேற்பு' என்பதும்கூட இன்றுகூட அனைவருக்குமே சாத்தியப்படாத ஒன்றாக இருக்கும்போது, 80 ஆண்டுகளுக்கு முந்தைய நிலை எவ்வாறு இருந்திருக்கும். இந்நிலையில் சீனிவாசன் அவர்கள் சட்டசபை உறுப்பினராக இருக்கும்போது கொண்டுவந்த முக்கியமான தீர்மானங்களுள் சில: ஆதி திராவிட மக்களும் மற்றவர்களைப் போல பொதுச் சாலைகள், இடங்கள் ஆகியவற்றில் புழங்குவதற்குத் தடை எதுவும் இருக்கக் கூடாது; அதைப்போலவே, மதுக்கடைகளை மூடுவதற்கு இவர் தீர்மானம் கொண்டுவந்தபோது, குறைந்த பட்சம் வார இறுதியிலாவது மூட அப்போதைய பிரிட்டிஷ் அரசு ஒப்புக்கொண்டது.

தீவிரமான சமூகச் செயற்பாட்டாளராக இருந்த இவர், டாக்டர் அம்பேத்கருடன் இணைந்து லண்டனில் இரண்டாவது வட்டமேசை மாநாட்டிலும் கலந்துகொண்டது பலருக்குத் தெரியாது. இரட்டை வாக்குரிமை போன்றவற்றை வலியுறுத்திய அம்பேத்கருக்கு ஆதரவாக இவரும் இருந்தார். இரண்டு மலைகளுக்கு நடுவில் சூரியன் உதிக்கும் சின்னத்தினை வடிவமைத்தவரும் இவர்தான். 1935ம் ஆண்டு, அம்பேத்கர் மதம் மாற வேண்டும் என்று கூறிய போது, “நாம் அவர்ணஸ்தர் (இந்து மதத்தில் இல்லாதவர்). நாம் இந்துவாக இருக்கும்போதுதானே மதம் மாற வேண்டும்” என்று கூறியவர் அவர். பல்வேறு போராட்டங்களையும், அடக்குமுறைகளுக்கு எதிரான நடவடிக்கைகளையும் எதிர்கொண்ட அந்தச் சமூகப் போராளி 1945ம் ஆண்டு இதே தேதியில் மறைந்தார். எவ்வளவோ பணிகளை முன்னின்று செய்த அவருடைய வாழ்க்கை குறித்து, அவராக எழுதிய சிறிய அளவிலான வாழ்க்கைக் குறிப்பும், சில பிரசுரங்களும் தவிர, நமக்குப் பெரிதாக ஆவணங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

இரட்டைமலை சீனிவாசன் நினைவு தினம் பற்றி எழுதிக்கொண்டிருக்கும் இதே நேரத்தில் இரண்டு முக்கியச் செய்திகளைக் காண முடிகிறது. ஒன்று, தெலங்கானாவில், தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்ததற்காக, கருவுற்றிருந்த பெண் முன்பே அவரது கணவர் கொலை செய்யப்படுகிறார். மனித வளர்ச்சி குறியீட்டில் (human development index) இந்தியாவுக்கு 130ம் இடம் கிடைத்திருக்கிறது. கல்வி, வறுமை ஒழிப்பு போன்ற இடங்களில் ஓரளவு முன்னேறியிருந்தாலும், நாம் எங்குத் தெரியுமா பின்தங்கியிருக்கிறோம்? சமூகத்தில் நிலவும் பாகுபாடுகளைக் களைவதில்.

சமத்துவமின்மையை நீக்குவதில்தான் நாம் பின்னடைந்திருக்கிறோம். ஒருவகையில், இந்த இரண்டு செய்திகளையும் தொடர்புப்படுத்திப் பார்த்துக்கொள்ளலாம்தான். இங்கு நிலவும் சமத்துவமின்மையும், பாகுபாடுகளும் தொடங்கும் வேரினை நோக்கி நாம் பயணிக்க வேண்டும். அங்கிருந்து நம்முடைய பிரச்னைகளை வரலாற்றின் வழியாக நாம் அறிந்துகொண்டால்தான் எதிர்காலம் குறித்த தெளிவு கிடைக்கும்.

அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிதறி கிடக்கும் வரலாற்றுத் துண்டுகளைப் பொருத்திப் பார்த்துக் கொள்வது மூலமாகவே இன்று நிலவும் பல கேள்விகளுக்கு நம்மால் விடை அளிக்க முடியும். அதுவே சமத்துவத்துக்காகவும், சமூக நீதிக்காகவும் போராடிய இரட்டைமலை சீனிவாசன் போன்ற பல முன்னோர்களுக்கு நன்றி செலுத்தும் வழிகளில் ஒன்றாக இருக்கும்!

Original Article

Previous தொடர்ந்து உச்சம்! பெட்ரோல் ரூ.85.41.. டீசல் ரூ.78.10..
Next ரூ.550 கோடி மதிப்பிலான திட்டங்கள்: வாரணாசியில் மோடி துவக்கி வைத்தார்

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *