கோடையில் ஆடுகளை பாதிக்கும் ‘ஆட்டுக்கொல்லி நோய்’ தடுப்பது எப்படி???


வெள்ளாடு வளர்ப்பு என்பது பண்ணை தொழில் என்ற நிலை மாறி தற்போது பெரும் முதலீடு செய்யும் தொழிலாக உருவெடுத்துள்ளது. இத்தொழில் வரவு விகிதம் கூடுதலாக இருப்பதால் ஆர்வத்துடன் விவசாயிகள் ஈடுபடுகிறார்கள்.
வளரும் மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்றவாறு ஆட்டின் இறைச்சியும் கூடுதலாக தேவைப்படுகிறது. ஆடு வளர்ப்பு என்பது விவசாயிகளின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. தனிமனிதரின் அன்றாட புரதத் தேவையையும் பூர்த்தி செய்கிறது. பொதுவாக எந்த இடங்களில் எல்லாம் மேய்ச்சல் நிலங்கள் இருக்கிறதோ அங்கே பகல் பொழுதில் ஆடுகளை மேயவிட்டு பின்னர் மாலையில் கூடுதல் தீவனம் கொடுத்து வளர்ந்தால் ஆடு வளர்ப்பது லாபகரமானதாக அமையும். மேய்ச்சல் தரை வசதியில்லாத பகுதிகளில் ஆடுகளுக்கு பசுந்தீவனங்களை சாகுபடி செய்து மர இலைகளுடன் தீவனம் அளித்தால் ஆடுகளில் உடல் வளர்ச்சி கூடுதலாகி இறைச்சி விற்பனையில் விவசாயிகள் நல்ல லாபம் அடையலாம்.
ஆட்டுக்கொல்லி நோய்
கோடை காலத்தில் ஆடுகளை தாக்கி பொருளாதார இழப்பை நோய் ஏற்படுத்தும் நோய்களில் முக்கியமானது ஆட்டுக்கொல்லி நோயாகும். இதனை ஆங்கிலத்தல் பி.பி.ஆர்., என அழைப்பார்கள். இது ஒரு வைரஸ் தொற்று நோய் வகையாகும். தீவிரமாகவும், வேகமாகவும் பரவக்கூடியது. பி.பி.ஆர்., எனும் ஆட்டுக்கொல்லி நோய் செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள், என இரு இனங்களையும் தாக்கக்கூடியது. இந்நோய்க்கான கிருமிகள் ஒரு ஆட்டிலிருந்து மற்ற ஆடுகளுக்கு தும்மல் மற்றும் இருமல் மூலம் மிக விரைவில் பரவும். இது தவிர நோய்க்கிருமிகள் பாதிப்புள்ள தீவனம் மற்றும் தண்ணீர் தொட்டிகள் மூலமாகவும் நோய் பரவும்.
தும்மல், இருமல் தடுக்க:
நோய் தாக்கிய ஆடுகள் ஆரம்பத்தில் அதிகக் காய்ச்சலால் அவதிப்படும். உடல் இளைத்து இறக்கவும் நேரிடும். நோயால் அவதிப்படும் ஆடுகளின் கணகள், மூக்கு மற்றும் வாயிலிருந்து நீர் வடியும். தும்மல் மற்றும் இருமல் பிறகு ஆரம்பிக்கும். இறுதியில் கழிச்சல் கண்டு ஆடுகள் மரணத் தருவாயில் தள்ளப்படுகின்றன. நோய் தாக்கிய ஆடுகளில் நோயின் அறிகுறிகள் ஆறு நாட்கள் வரை காணப்படும். ஆரம்பத்தில் காய்ச்சல் கண்டு உடல் வெப்ப நிலை அதிகரிக்கும். ஆடுகள் துாங்குவது போன்ற முகத்தோற்றத்துடன் இருக்கும். கண்கள் மூக்கிலிருந்து மஞ்சள் நிறத்தில் கெட்டியான நீர் வெளியேறும். கண்களில் அதிகநீர் வெளியேறினால் கண்களின் இமைகள் சில வேளைகளில் மூடிக்கொள்ளும். மூக்கிலிருந்து அதிக சளி வடிந்தால் ஆடுகள் மூச்சு விடுவதில் திணறும்.
குணமடைய வழி:
ஆடுகளில் தும்மல் மற்றும் இருமல் அடிக்கடி இருக்கும். நாட்கள் செல்லச்செல்ல பாதிப்பு ஏற்பட்ட ஆடுகள் கழிச்சல் கண்டு உடல் மெலிந்து இறக்க நேரிடும். ஆட்டுக்கொல்லி என்னும் பி.பி.ஆர். நோய் தடுப்பூசி மருந்துகள் உள்ளன. கால்நடை பராமரிப்புத்துறை மூலம் இத்தடுப்பூசி ஆடுகளுக்கு போடப்படுகிறது. இதன் மூலம் இறப்பை தடுக்க இயலும். ஆங்கில மருந்துகளுடன் தமிழ்நாடு கால்நடை அறிவியல் மருத்துவ பல்கலை பரிந்துரை செய்த மூலிகை சிகிச்சை பொருட்களையும் வழங்கலாம். பி.பி.ஆர்., நோய் உள்ள இடங்களிலிருந்து ஆடுகளை புதிதாக வளர்ப்புக்கு வாங்கக்கூடாது. அப்படி வாங்கி மந்தையில் சேர்த்தால் மற்ற ஆடுகுளுக்கும் எளிதில் நோய் பரவும். நோய் பாதித்த ஆடுகளை நிழலான இடத்தில் கட்டி வைத்து மருந்துவர் மூலம் தகுந்த சிகிச்சை அளித்தால் ஆடுகளை காப்பாற்றி விடலாம். தொடர்புக்கு 94864 69044.
Previous 'கிராவிட்டி சூட்' பயன்படுத்தி உற்ச்சாகமாக!!!!! பறக்கலாம்,,,,,
Next தயிர் சாப்பிடுவது உடம்புக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்குமா?

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *