முப்பரிமாண இணைப்பு பொருள் மூலம் இதய சேதத்தை சரி செய்யலாம்..!


முப்பரிமாண உயிரி ஒட்டுப் பொருள் மூலம், மாரடைப்பிற்கு பின்னர் இதயத்தில் சேதமடைந்திருக்கும் இதய திசுவை சரி செய்யும் தொழில்நுட்பத்தை அமெரிக்காவின் மின்னசோட்டா பல்கலைகழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

பொதுவாக ஒரு நபருக்கு மாரடைப்பு ஏற்படும் போது, அவரின் இதய தசைகளுக்கு தேவையான இரத்த ஓட்டம் கிடைக்காமல், இதயத்தில் இருக்கும் சில செல்கள் இறந்துவிடும். நம்முடைய உடலினால் இது போன்ற இதய செல்களை மீண்டும் உருவாக்க முடியாது. எனவே செல்கள் இறந்து போன  இதயப் பகுதியில், தழும்பு ஏற்பட்டு விடும். இதன் காரணமாக அந்த நபருக்கு எதிர்காலத்தில் இதய செயலிழப்பு கூட நேரிடலாம்.

இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் லேசரை அடிப்படையாக கொண்டு முப்பரிமாண உயிரி அச்சு தொழில்நுட்பத்தின் மூலம் புதிய இணைப்புப் பொருளை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இந்த இணைப்புப் பொருளானது, இளம் வயது நபரின் ஸ்டெம் செல்களில் இருந்து பெறப்பட்ட  இதய செல்கள் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த இணைப்புப் பொருளானது மாரடைப்பு ஏற்பட்ட எலி ஒன்றின்  மேல் சோதிக்கப்பட்டது. இந்த இணைப்பு பொருள் எலியின் இதயத்தில் செலுத்தப்பட்ட பின்னர், வெறும் 4 வாரங்களில் இதயத்தின் செயல்பாடு அதிகரித்ததை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். மேலும் சேதம் ஏற்பட்ட இதயத்தின் பகுதிகள், இந்த பொருள் மூலம் தானாகவே சீரமைந்துள்ளது. இதனால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியமும் தேவைப்படவில்லை.

அமெரிக்காவில் ஏற்படும் பெரும்பாலான  மரணங்களுக்கான  காரணங்களில் இதய நோய் முதலிடத்தில் உள்ளது. எனவே இந்த புதிய கண்டுபிடிப்பு, அமெரிக்க மருத்துவ உலகில் பெரும் மாற்றத்தை கொண்டு வரும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். தற்போது மிகச்சிறிய அளவில் இந்த இணைப்புப் பொருளை உருவாக்கியுள்ள விஞ்ஞானிகள், அடுத்தகட்டமாக பெரிய அளவிலான இணைப்புப் பொருளை உருவாக்கி அதனை ஒரு பன்றியின் இதயத்தில்  பரிசோதிக்க உள்ளனர்.

Previous தெற்காசிய நாடுகளுக்கான செயற்கைகோளை ஏவ உள்ள இஸ்ரோ..!
Next மைக்ரோ சிப் உற்பத்தியை நிறுத்த உள்ள டோஷிபா நிறுவனம்..!

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *